தமிழ்நாட்டில் ஜூலை 30ஆம் தேதி முதல் மருத்துவக் கலந்தாய்வு துவங்குக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் கூறியுள்ளார். சான்றிதழ்கள் 18ம் தேதி சரி பார்க்கப்படுகிறது என்றும் இறுதி பட்டியல் 25-ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளதாகவும் அவ் தெரிவித்துள்ளார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பு சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 5.25 கோடி மதிப்பீட்டில் நவீன கலையரங்கம் கட்டும் பணியினை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இளங்கலை எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள் கடந்து ஜூன் மாதம் 6 ஆம் தேதியிலிருந்து 29ஆம் தேதி வரை பெறப்பட்டது. 72 ஆயிரத்திற்கும் மேலான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சான்றிதழ்களை இணைக்க தவறிய மாணவர்களுக்கு இரண்டு நாட்கள் கால அவகாசம் வழங்கப்படுகிறது.
20 மாணவர்கள் போலியான தகவல்களை கொடுத்துள்ளதால் அவர்கள் கலந்தாய்வில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்கள். மூன்று ஆண்டுகள் மருத்துவ கலந்தாய்வில் இருந்து கலந்து கொள்ள தடை செய்யப்படுகிறார்கள். அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை 13 புதிய மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு அனுமதி கிடைத்துள்ளது. கூடிய விரைவில் தொடங்கப்படும். நிபா வைரஸின் தாக்கம் தமிழகத்தில் இல்லை. தமிழக கேரளா எல்லைகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே இது குறித்து பதற்றப்படத் தேவையில்லை என்றார்.