முன்பதிவு கவுண்டர்களில் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்பவர்கள் , தங்கள் டிக்கெட்டுகள் உறுதி செய்யப்படுவதற்கு முன்பு மொபைல் OTP சரிபார்ப்பை முடிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது.
கடைசி நேர முன்பதிவு நேரத்தைக் கட்டுப்படுத்துவது, முறைகேடுகள் நடப்பதை தடுப்பது உள்ளிட்ட பயணிகளின் பாதுகாப்புக்காக ரயில்வே அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ரயில்நிலையங்களில் உள்ள கவுன்டர்களில் தட்கல் டிக்கெட் வாங்கும் போது, ஓடிபி எனப்படும், செல்போன் எண்ணுக்கு வரும் ஒரு முறை கடவுச்சொல் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 17 ஆம் தேதி சோதனை முயற்சியாக தொடங்கப்பட்ட OTP அடிப்படையிலான அமைப்பு, குறைந்த எண்ணிக்கையிலான ரயில்களுடன் தொடங்கியது, ஆனால் ஆரம்பகால சோதனைகளுக்குப் பிறகு விரைவாக 52 சேவைகளாக விரிவுபடுத்தப்பட்டது என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த வழிமுறை வரும் நாட்களில் மீதமுள்ள அனைத்து ரயில்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
சாதாரண பயணிகளுக்கு தட்கல் முன்பதிவுகளை மிகவும் பாதுகாப்பாகவும் நியாயமாகவும் மாற்றுவதே இந்தப் புதிய செயல்முறையின் நோக்கமாகும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது, “கவுண்டர் முன்பதிவுகளின் போது, முன்பதிவு படிவத்தில் வழங்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும், மேலும் வெற்றிகரமான சரிபார்ப்பிற்குப் பிறகுதான் டிக்கெட் உறுதி செய்யப்படுகிறது,” என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தட்கல் ஒதுக்கீட்டை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கும், உண்மையான பயணிகளுக்கான அணுகலை மேம்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் குறிப்பிட்டனர். கைமுறையாக டிக்கெட் எடுப்பதில் பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு, வெளிப்படைத்தன்மை மற்றும் வசதியையும் இந்த அம்சம் கொண்டு வர உதவும் என்று அவர்கள் கூறினர்.
முன்னதாக கடந்த ஜூலை மாதம், ஆன்லைனில் முன்பதிவு செய்யும் தட்கல் டிக்கெட்டுகள், சரியான பயணிகளுக்கு மட்டுமே கிடைப்பதை உறுதி செய்ய அண்மையில் ஆதார் கட்டாயமாக்கப்பட்டது. பின்னர், அக்டோபர் 1 முதல், எந்தவொரு ரயிலுக்கும் முன்பதிவு சாளரத்தின் முதல் 15 நிமிடங்களில், ஆதார்-அங்கீகரிக்கப்பட்ட பயனர்கள் மட்டுமே IRCTC தளத்தில் முன்பதிவு செய்யப்பட்ட பொது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
