தெலங்கானா மாநிலத்தில் நக்சல் அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் உள்பட 37 பேர் இன்று (நவ. 22) ஒரே நாளில் ஆயுத நடவடிக்கையை கைவிட்டுவிட்டு, அமைதி வாழ்க்கைக்காக சரணடைந்தனர்.
நாடு முழுதும் உள்ள நக்சல்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக நக்சல் செயல்பாடுகள் அதிகமுள்ள மாநிலங்களில் நடவடிக்கைகளை வேகப்படுத்தி வருகிறது. பீகார், ஜார்க்கண்ட், தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் செயல்பாட்டில் இருக்கும் நக்சல் அமைப்பினர் தங்களின் ஆயுத நடவடிக்கையை கைவிட்டு, சரண் அடைந்து வருகின்றனர்.
இந்தநிலையில் தெலங்கானா மாநிலத்தில் இன்று (நவ. 22) ஒரே நாளில் நக்சல் அமைப்பின் நிர்வாகிகள் உள்பட 37 பேர் ஆயுத நடவடிக்கையை கைவிட்டு சரணடைந்துள்ளனர். அமைதியான, பாதுகாப்பான, அன்றாட வாழ்க்கைச் சூழலை அனுபவிக்கும் எண்ணத்தில் நக்சல்களின் சரண் நடவடிக்கை அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சரணடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களாவர்.
நவீன ஏகே 47 ரக துப்பாக்கிகள், எஸ்எல்ஆர் ரக துப்பாக்கிகள், 330 ரக துப்பாக்கிகள், ஜி3 வகை துப்பாக்கி, தோட்டாக்கள் ஆகிய ஆயுதங்களை சரணடைந்த நக்சல்கள் போலீசிடம் ஒப்படைத்தனர்.
தடை செய்யப்பட்ட நக்சல் அமைப்பைச் சேர்ந்த 37 பேர் சரண் அடைந்துள்ளதாகவும், அவர்களில் 3 பேர் முக்கியமானவர்கள் என்றும் தெலுங்கானா டிஜிபி ஷிவாதர் ரெட்டி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். 59 பேர் தலைமறைவாக உள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானவர்கள் 50 வயதை கடந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். தலைமறைவாக உள்ள நக்சல் அமைப்பினரும், சரணடைந்து, அமைதியான வாழ்க்கையை வாழ வேண்டுமென அழைப்பு விடுப்பதாகவும் டிஜிபி ஷிவாதர் ரெட்டி தெரிவித்தார்.
