உண்மையான இந்தியர் யார் என நீதிமன்றம் தீர்மானிப்பதில்லை எனவும், அது அவர்களின் வேலை இல்லை எனவும் பிரியங்கா காந்தி எம்.பி., கூறியுள்ளார்.

நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, கடந்த 2022-ம் ஆண்டு மேற்கொண்ட பாரத் ஜோடா யாத்ரா நிகழ்ச்சியில், எல்லையில் சீனப்படைகளுடனான மோதல் பற்றி குறிப்பிட்டார். அப்போது அவர் இந்திய ராணுவம் பற்றி தரம் தாழ்ந்து பேசியதாக உதய் சங்கர் ஸ்ரீவஸ்தவா என்பவர் லக்னோ நீதிமன்றத்தில் ராகுல்காந்திக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில், ராகுல்காந்திக்கு லக்னோ கோர்ட்டு சம்மன் அனுப்பியது. சம்மன் உத்தரவையும், புகாரையும் ரத்து செய்யக்கோரி, அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ராகுல்காந்தி வழக்கு தொடர்ந்தார். ஆனால் அதை ஏற்க மறுத்த அலகாபாத் உயர்நீதிமன்றம், ராகுல்காந்தி மனுவை தள்ளுபடி செய்தது. அந்த உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல்முறையீடு செய்தார். இந்த மனு, நீதிபதிகள் திபங்கர் தத்தா, அகஸ்டின் ஜார்ஜ் மசி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, 2 ஆயிரம் சதுர கி.மீ. இந்திய பகுதியை சீனா ஆக்கிரமித்துக் கொண்டதாக உங்களுக்கு (ராகுல்காந்தி) எப்படி தெரியும்? நீங்கள் அங்கு இருந்தீர்களா? உங்களிடம் நம்பகமான ஆதாரம் இருக்கிறதா?. எந்த ஆதாரமும் இல்லாமல் ஏன் இப்படிப்பட்ட கருத்துகளை பேசுகிறீர்கள்? நீங்கள் உண்மையான இந்தியராக இருந்தால், இதுபோன்று பேச மாட்டீர்கள். நீங்கள் எதிர்க்கட்சி தலைவர். இதை ஏன் நீங்கள் நாடாளுமன்றத்தில் சொல்லவில்லை?. சமூக வலைத்தளங்களில் ஏன் சொல்கிறீர்கள்? என்று நீதிபதிகள் கடிந்து கொண்டனர்.

இதற்கு பதில் தெரிவிக்கும் விதமாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா காந்தி, உண்மையான இந்தியர் யார்? என்பதை நீமன்றம் தீர்மானிப்பதில்லை; அது நீதிபதிகளின் வேலை அல்ல. என் சகோதரர் (ராகுல்காந்தி) ஒருபோதும் ராணுவத்திற்கு எதிராக செயல்படமாட்டார். நமது ராணுவம், ராணுவ வீரர்கள் மீது உயர்ந்த மரியாதை வைத்துள்ளார். எனவே, இது ஒரு தவறான கருத்து.

அரசாங்கத்தை கேள்வி கேட்பது எதிர்க்கட்சி தலைவரின் கடமை; அதைத்தான் அவர் செய்கிறார்.இது மத்திய அரசுக்கு பிடிக்கவில்லை; அவருக்கு பதிலளிக்க மத்திய அரசு விரும்பவில்லை; அதனால்தான் இந்த தந்திரங்களையெல்லாம் பயன்படுத்துகிறார்கள். நாடாளுமன்றத்தை நடத்தக்கூட முடியாத அளவுக்கு மத்திய அரசு பலவீனமாகிவிட்டது எனக் கூறியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version