நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறாமல் போனதை எதிர்க்கட்சிகள் வெற்றியாகக் கருதி கொண்டாடி வருவதை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடுமையாகச் சாடியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தியாவின் சரிபாதி மக்கள் தொகையாக விளங்கும் 70 கோடி பெண்களின் உரிமைகளைப் பறித்துவிட்டு, எதிர்க்கட்சிகள் எவ்வாறு மகிழ்ச்சியை வெளிப்படுத்த முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். பல தசாப்தங்களாகத் தங்கள் அரசியல் பிரதிநிதித்துவத்திற்காகக் காத்திருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும், எதிர்க்கட்சிகளின் இந்த கொண்டாட்டம் இழைக்கப்படும் மிகப்பெரிய அவமானம் என்று அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
பெண்களின் முன்னேற்றத்திற்காகக் கொண்டு வரப்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டத்தைத் தடுத்து நிறுத்தியதன் மூலம், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மீண்டும் ஒருமுறை பெண்களைக் காட்டிக்கொடுத்துள்ளதாக அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார். பெண்களின் நம்பிக்கையைச் சிதைத்துவிட்டுப் பெறும் இந்த வெற்றி, உண்மையில் ஒரு வெற்றியாகக் கருதப்பட முடியாது என்றும், இது நாட்டின் பெண் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட துரோகம் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பெண்களின் உரிமைகளை முடக்கும் செயல்களில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டு வருவதாக அவர் சாடியுள்ளார்.
மேலும், ஆணவத்தின் அடிப்படையில் எட்டப்படும் தற்காலிக வெற்றிகள் ஒருவருக்கு மகிழ்ச்சியைத் தரலாம், ஆனால் அது உண்மையில் மறைக்கப்பட்ட ஒரு பெரும் தோல்வியாகும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் எச்சரித்துள்ளார். சில அரசியல் கட்சிகளால் இந்த உண்மையை உணர முடியவில்லை என்று குறிப்பிட்ட அவர், இத்தகைய கொண்டாட்டங்கள் பெண்களின் நீண்டகாலப் போராட்டத்தை இழிவுபடுத்துவதாகத் தெரிவித்தார். இந்த விவகாரம் தற்போது தேசிய அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
