வெளிநாட்டு தலைவர்களை சந்திக்கவிடாமல், எதிர்க்கட்சிகளை திட்டமிட்டு தவிர்ப்பதாக மத்திய அரசு மீது ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இரண்டு நாட்கள் அரசு முறைப் பயணமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று இந்தியா வந்துள்ளார். டெல்லியில் அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி இரவு விருந்து அளித்து வரவேற்கிறார். நாளை (டிச.5) பாதுகாப்பு ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் அணு உலைகள் குறித்து பிரதமர் மோடியுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்தநிலையில், வெளிநாட்டு தலைவர்களை சந்திக்கவிடாமல், எதிர்க்கட்சிகளை திட்டமிட்டு தவிர்ப்பதாக மத்திய அரசு மீது ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
நாடாளுமன்றத்திற்கு வெளியே எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியிடம் அரசுமுறை பயணமாக ரஷ்ய அதிபர் புதினின் இந்திய வருகை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ராகுல், வெளிநாட்டுத் தலைவர்கள் எதிர்க்கட்சி தலைவரைச் சந்திப்பது என்பது வாஜ்பாய் மற்றும் மன்மோகன் சிங் காலத்திலிருந்தே ஒரு பாரம்பரியமாக இருந்தது. ஆனால், தற்போது நான் வெளிநாடுகளுக்கு சென்றாலும், எதிர்க்கட்சித் தலைவரை சந்திக்க வேண்டாம் என்று அரசாங்கம் அவர்களுக்கு அறிவுறுத்துகிறது,” என்று தெரிவித்தார்.
பாதுகாப்பின்மை உணர்வின் காரணமாகவே பிரதமர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகம் இப்படி செயல்படுவதாகவும், இந்தியாவின் நிலைப்பாடு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் வேறு கண்ணோட்டத்தை அளிப்பதை அரசு விரும்பவில்லை என்றும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
