இந்தத் தேர்தலில் இது எனது கடைசிப் பேரணி… மே 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, பாஜகவின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள நான் மீண்டும் வர வேண்டும் என்ற நம்பிக்கையுடன் திரும்புகிறேன்,” என்று பிரதமர் மோடி சூளுரைத்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 29ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கு முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி இன்று பராக்பூரில் நடைபெற்ற ‘விஜய் சங்கல்ப்’ பேரணியில் உரையாற்றினார். மே 4 அன்று பாரதிய ஜனதா கட்சி (பாஜக) வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார்.
கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், தனது வாழ்க்கையிலும் ஆன்மீகப் பயணத்திலும் வங்காளம் ஒரு முக்கியப் பங்காற்றியுள்ளது என்று கூறினார். “வங்காளத்தின் மீது எனக்கு இருந்த பற்று, சக்தி மீதான பக்தியாகும். இதுவே எனது தனிப்பட்ட ஆன்மீகப் பயணத்தின் ஆற்றல் மையமாக இருந்துள்ளது. வங்காளத்தின் மாபெரும் ஆளுமைகளாலும், ஜனதா ஜனார்த்தனம் எனும் மக்களின் அளவற்ற அன்பாலும் இது உத்வேகம் பெற்றது. இந்த வங்காள மண்ணில் நான் பெற்ற அனுபவங்களை, எனக்குக் கிடைத்த ஒரு பெரும் ஆசீர்வாதமாகக் கருதுகிறேன்,” என்று பிரதமர் மோடி கூறினார்.
மாநிலத்தில் நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சாரத்தில் பராக்பூர் பேரணியே தனது கடைசிப் பொதுக்கூட்டம் என்று குறிப்பிட்ட அவர், தேர்தல் முடிவுகள் மீது நம்பிக்கை தெரிவித்தார். “இந்தத் தேர்தலில் இது எனது கடைசிப் பேரணி. மேற்கு வங்கத்தில் நான் சென்ற இடமெல்லாம் மக்களின் மனநிலையைக் கண்டிருக்கிறேன். மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, பாஜகவின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள நான் மீண்டும் வர வேண்டும் என்ற நம்பிக்கையுடன் திரும்புகிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.
பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி துன்புறுத்தும் சமூக விரோதிகள் அனைவரும், மே 4ம் தேதிக்குப் பின், மேற்கு வங்கத்தில் அமைய உள்ள புதிய பா.ஜ. அரசின் மூலம் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்படுவர்.
