, உத்தரப் பிரதேசத்தில் பர்கா அணியாமல் வீட்டை விட்டு வெளியே வந்ததற்காக மனைவி, 2 மகள்களை கொன்று வீட்டுக்குள் குழித் தோண்டி தந்தை புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்த விவரம் வருமாறு:
உத்தரப் பிரதேச மாநிலம் சாம்லி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் முகம்மது பரூக் (37), மனைவி தைரா (35). இவர்களுக்கு கடந்த 2009ம் ஆண்டு திருமணம் ஆனது. 2 பேருக்கும், 3 மகன்கள், 2 மகள்கள் என மொத்தம் 5 குழந்தைகள் இருந்தனர்.
பரூக் சமையல் வேலை செய்து வந்தார். கடந்த 10-ம் தேதி இரவு தைரா, பரூக் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பர்கா அணியாமல் தைரா தனது பெற்றோர் வீட்டுக்கு செல்வதற்காக வெளியே வந்துள்ளார். இதை பார்த்து ஆத்திரப்பட்ட பரூக், வீட்டில் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து வந்து, தைரா தலையில் சுட்டு கொலை செய்துள்ளார்.
துப்பாக்கித் தோட்டா சத்தம் கேட்டு, தூக்கம் கலைந்து வெளியே வந்த 2 மகள்களையும் பரூக் சுட்டுக் கொன்றுள்ளார். அதன்பின்னர் 3 பேரையும், வீட்டுக்குள் கழிப்பறை கட்டுவதற்காக ஏற்கெனவே தோண்டப்பட்டிருந்த குழிக்குள் போட்டு புதைத்து மூடியுள்ளார்.
இரவு முழுவதும் 3 மகன்களும் வீட்டில் தூங்கியதால் பரூக்கிடம் இருந்து நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். மறுநாள் காலையில் எழுந்து மகன்கள், தனது தாய் குறித்தும், 2 சகோதரிகள் குறித்தும் கேட்டபோது, வெளியூர் சென்றிருப்பதாக பரூக் கூறியுள்ளார். இதை மகன்கள் நம்பியபோதும், பரூக்கின் பெற்றோர் நம்பவில்லை.
மருமகளும், பேத்திகளும் சுமார் ஒருமாதமாக காணாததை கண்டு சந்தேகமடைந்து, பரூக்கிடம் கேட்டபோது சரியாக பதிலளிக்கவில்லை. இதைத் தொடர்ந்து, கிராமத் தலைவரிடம் பரூக்கின் பெற்றோர் புகார் அளித்தனர். அவர் கான்ட்லா காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்க, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி, மனைவி, 2 மகள்களை பரூக் கொலை செய்ததை கண்டுபிடித்து, அவரை கைது செய்தனர்.
இந்த சம்பவத்தால் உத்தரப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
