புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நியமன எம்எல்ஏக்கள் 3 பேர் திடீரென தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் மொத்தம் 30 இடங்கள் உள்ளன. இதில் 23 இடங்கள் புதுச்சேரியிலும், 5 இடங்கள் காரைக்காலிலும், மாஹே மற்றும் ஏனாம் இடங்களில் தலா ஒரு இடங்களென பிரிந்துள்ளன. இதுமட்டுமல்லாது 3 நியமன எம்எல்ஏக்கள் உள்ளனர். என்.ஆர். காங்கிரசின் தலைவரான ரங்கசாமி முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். பாஜகவின் ஏம்பலம் செல்வம் சபாநாயகராக உள்ளார்.
பாஜகவைச் சேர்ந்த ராமலிங்கம், அசோக் பாபு, வெங்கடேசன் ஆகிய மூன்று பேர் நியமன எம்எல்ஏக்களாக இருந்து வந்தனர். இந்நிலையில், மூன்றுபேரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி அதற்கான கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கினர். முன்னதாக பாஜக தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயம், முதலமைச்சரையும், சபாநாயகரையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்தே இந்த ராஜினாமா கடிதம் வழங்கப்பட்டது.
இவர்களுக்கு பதிலாக மூன்று புதிய நியமன எம்எல்ஏக்களை நியமிக்க பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளதாம். அந்த மூன்று பேரில் ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்பதும் பாஜகவின் கோரிக்கையாம். தற்போது புதுச்சேரியில் நமச்சிவாயம், சாய் சரவணன் அமைச்சர்களாக உள்ளனர். ஆனால் என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் 3 பேர் உள்ளனர். எனவே தங்களுக்கும் அமைச்சரவையில் சமபங்கு வேண்டும் என்பதே பாஜகவின் நிலைப்பாடாக உள்ளது.