ஓய்வு பெற உள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் இன்று (நவ. 21) பணி நிறைவு நாளையொட்டி கடைசி நாள் வழக்கு விசாரணைகளை மேற்கொள்கிறார்.
நாட்டின் 52வது தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ண கவாய் 14.05.2025-ல் பதவியேற்றார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
கடந்த 2000ம் ஆண்டில் ஜனவரி 17ல் நாக்பூர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பி.ஆர்.கவாய் நியமிக்கப்பட்டார். 2003 நவம்பர் 14ல் மும்பை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். 2005 நவம்பர் 12ல் மும்பை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக பொறுப்பேற்றார். கடந்த 2019 மே 24ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவி உயர்வு பெற்றார்.
இந்தநிலையில், கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக அவர் பதவியேற்றுக் கொண்டார். இந்த காலகட்டங்களில் அரசியலமைப்பு மற்றும் நிர்வாகச் சட்டம், சிவில் சட்டம், குற்றவியல் சட்டம், வணிக தகராறுகள், நடுவர் சட்டம், மின்சார சட்டம், சுற்றுச்சூழல் சட்டம், கல்வி தொடர்பான விஷயங்கள் என பல்வேறு வழக்குகளை சுமார் 700 அமர்வுகளில் பி.ஆர்.கவாய் கையாண்டுள்ளார். குடிமக்களின் அடிப்படை உரிமைகள், மனித உரிமைகள் மற்றும் சட்ட உரிமைகளை பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்த அரசியல் அமர்வு தீர்ப்புகள் உள்பட 300 தீர்ப்புகளை அவர் எழுதி உள்ளார்.
மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு நீதித்துறை காலக்கெடு நிர்ணயிக்க முடியாது என்ற தீர்ப்பு வழங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் பி.ஆர்.கவாய் இடம்பெற்றார்.
இந்தநிலையில், வரும் 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமையுடன் பி.ஆர்.கவாய் ஓய்வு பெற உள்ளார். இதனால், வெள்ளிக்கிழமையான இன்று (நவ. 21) உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கடைசி நாள் விசாரணைகளை அவர் மேற்கொள்கிறார். நீதிபதி பி.ஆர். கவாய் ஓய்வு பெறுவதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பதவியேற்க உள்ளார்.
