புதுச்சேரி முதலமைச்சர் உடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் பி.ஆர்.டி.சி எனப்படும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. புதுச்சேரியில் பி.ஆர்.டி.சியில் சுமார் 220-க்கும் மேற்பட்ட நிரந்தர ஊழியர்களும், 250க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர். கடந்த 2015-ம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக கடந்த ஏப்ரல் மாதம் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. இது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில், பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு உறுதியளித்தது. அதனால் போராட்டம் கைவிடப்பட்டது. அதில் முன்னேற்றம் எதுவும் ஏற்படாத நிலையில், புதுச்சேரியில் போக்குவரத்து ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும், 7-வது ஊதிய குழு சம்பளம் வழங்க கோரியும் நேற்று முன்தினம் முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஓட்டுநர்களின் போராட்டம் தொடர்ச்சியாக பல்வேறு பகுதிகளில் அரசு பேருந்துகள் ஓடவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமமடைந்த நிலையில், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை, பி.ஆர்.டி.சி சங்கத்தின் தலைவர்கள் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் அந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், வேலை நிறுத்தம் தொடரும் என கூறப்படுகிறது.

கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பேருந்துகள் பணி மனையில் நிறுத்தப்பட்டுள்ளன. பணிமனை முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், பயணிக்ள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். எனினும் புதுச்சேரியில் தனியார் மற்றும் தமிழக அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருவதால், ஓரளவு மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version