சர்வதேச சந்தையில் நிலவும் அசாதாரணமான சூழலைக் கருத்தில் கொண்டு, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு இந்தியாவுக்கு அமெரிக்கா  30 நாட்கள் கால அவகாசம் அளித்துள்ளது.

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கடல் வழியாக எண்ணெய் கொண்டு வரும் கப்பல்கள் பாதுகாப்பற்ற சூழலை எதிர்கொண்டுள்ளன. இந்த இக்கட்டான நிலையில், கடலில் தேங்கியுள்ள ரஷ்யாவின் கச்சா எண்ணெய் சரக்குகளை இந்தியா இறக்குமதி செய்து கொள்வதற்கு அமெரிக்கா தற்காலிகமாகப் பச்சைக்கொடி காட்டியுள்ளது.

அமெரிக்காவின் ஸ்காட் பெசென்ட்  இது குறித்துத் தெரிவிக்கையில், மார்ச் 5-ஆம் தேதிக்கு முன்பாக ரஷ்யாவிலிருந்து ஏற்றப்பட்ட கச்சா எண்ணெய் சரக்குகளை அடுத்த 30 நாட்களுக்குள் இந்தியா பெற்றுக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார். வரும் ஏப்ரல் 4-ஆம் தேதி வரை இந்தச் சலுகை அமலில் இருக்கும். வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் எண்ணெய் விலை கடுமையாக உயர்வதைத் தவிர்க்கவே இந்தத் தற்காலிக விலக்கு அளிக்கப்பட்டதாக அவர் விளக்கமளித்துள்ளார்.

ஏற்கனவே ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு எதிராக டிரம்ப் நிர்வாகம் கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வந்த நிலையில், தற்போதைய எரிசக்தி நெருக்கடியைக் கையாள இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் சலுகை என்றும், வரும் காலங்களில் இந்தியா தனது எரிசக்தித் தேவைகளுக்கு அமெரிக்காவையே அதிகம் சார்ந்திருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த அதிரடி முடிவால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையேற்றம் கட்டுக்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version