வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா சமீபத்தில் நடத்திய ஊடக சந்திப்பில் இந்திய அரசுக்கு எந்த பங்கும் இல்லை என்று வெளியுறவு அமைச்சகம்  தெளிவுபடுத்தியுள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், ஷேக் ஹசீனாவின் சந்திப்பு முற்றிலும் ஒரு தனியார் ஊடக நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது என்றும், அதில் இந்திய அரசுக்கு எந்தவொரு பங்கும் இல்லை என்றும் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார். வங்கதேசத்தின் தற்போதைய அரசு குறித்தும், அந்த நிகழ்வில் வெளிப்படுத்தப்பட்ட கருத்துகளுக்கும் இந்திய அரசு எந்த விதத்திலும் ஆதரவளிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்கு பிறகு நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா, கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 5) நடைபெற்ற ஒலியலவிலான இணையவழிச் சந்திப்பில் பேசினார். அப்போது, தன் மீது சிறைத் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்பிருந்தாலும், வரவிருக்கும் டிசம்பர் மாதம் வங்கதேசத்திற்குத் திரும்பப் போவதாக அவர் உறுதியளித்தார். நாட்டில் ஜனநாயகத்தை மீட்கப் பாடுபட போவதாகவும் அவர் அதில் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறைச் சட்டம்  குறித்து அமெரிக்கச் சட்டமியற்றுபவர் எழுப்பிய விமர்சனங்களுக்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சகம், இந்தியாவின் உள்நாட்டு சட்டங்களை இயற்றும் மற்றும் திருத்தும் அதிகாரம் இந்திய நாடாளுமன்றத்திற்கு மட்டுமே உண்டு என்று தெளிவுபடுத்தியது. அமெரிக்கா உட்பட பல நாடுகளிலும் வெளிநாட்டு நிதியை கட்டுப்படுத்த சட்டங்கள் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

சோமாலியா – பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றும் சவுதி அரேபியா, துருக்கி, பாகிஸ்தான் இடையேயான முத்தரப்புப் பாதுகாப்பு ஒப்பந்தம் போன்ற பிராந்திய பாதுகாப்பு நிகழ்வுகளை இந்தியா உன்னிப்பாகக் கவனித்து வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியக் கொடி தாங்கிய கப்பல்கள் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பிற்கு உயர் முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஷிப்பிங் அமைச்சகம் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து இந்தியத் தூதரகங்கள் செயல்பட்டு வருவதாகவும், 24 மணி நேர உதவி எண்கள்  தொடர்ந்து இயக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச நீர்வழிகளில் தடங்கலற்ற வணிகம் நடைபெற வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை அமைச்சகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version