பாகிஸ்தான் உடனான ஆதரவு நிலைப்பாட்டை கண்டித்து துருக்கி மற்றும் அஜர்பைஜான் நாடுகளுடனான வர்த்தக உறவை முழுமையாக புறக்கணிப்பதாக இந்திய வர்த்தகர்கள் அறிவித்துள்ளனர்.
பஹல்காம் சம்பவத்தை கண்டித்து பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது. இதில், பாகிஸ்தான் சேதங்களை சந்தித்தது. இந்தநிலையில், பாகிஸ்தான் ராணுவமும் எதிர்த்தாக்குதல் நடத்தியது. இருப்பினும், பாகிஸ்தானின் தாக்குதல்களை இந்திய ராணுவம் முறியடித்தது.
இந்தநிலையில், பாகிஸ்தான் பயன்படுத்தி ஆயுதங்கள் துருக்கி மற்றும் அஜர்பைஜான் வழங்கியது தெரியவந்தது. இதையடுத்து துருக்கி மற்றும் அஜர்பைஜானுக்கு கண்டனங்கள் எழுந்தது. இந்தநிலையில், பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை கண்டித்து துருக்கி, அஜர்பைஜான் நாடுகளை முழுமையாக புறக்கணிப்பதாக இந்திய வர்த்தகர்கள் அறிவித்துள்ளனர். 24க்கும் மேற்பட்ட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த வணிகத் தலைவர்கள் டெல்லியில் கூடி இந்த விவகாரம் குறித்து இறுதி முடிவை எடுத்தனர்.
கூட்டத்திற்கு பிறகு பேசிய அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல்வால், துருக்கி மற்றும் அஜர்பைஜானுடன் எந்தவொரு இறக்குமதி மற்றும் ஏற்றுமதியும் நடக்காது என்றார். இந்திய திரைப்படத் துறையும் துருக்கி மற்றும் அஜர்பைஜானில் தங்கள் படங்களைப் படமாக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
நாடு முழுவதும் 40,000க்கும் மேற்பட்ட வர்த்தக சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும், அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் முடிவு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.