கர்நாடகா பெல்லாரியில் நாளை (ஜனவரி 3ஆம் தேதி) நடைபெறவிருந்த வால்மீகி சிலை திறப்பு விழாவை முன்னிட்டு பேனர் வைப்பதில் பாஜக – காங்கிரஸ் இடையே ஏற்பட்ட தகராறு வன்முறையாக மாறியதால் பதற்றம் நிலவிவருகிறது.

கர்நாடகாவின் பெல்லாரியில், ஒரு பதாகை வைப்பது தொடர்பாக பாஜக எம்.எல்.ஏ ஜனார்த்தன ரெட்டி மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ பரத் ரெட்டி ஆகியோரின் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. விவகாரத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் காங்கிரஸ் தொண்டர் உயிரிழந்த நிலையில், பா.ஜ.க எம்.எல்.ஏ. ஜனார்த்தன ரெட்டி உட்பட 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

காவல்துறை கூற்றுப்படி, வியாழக்கிழமை (ஜனவரி 1, 2026) நடந்த இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். ஒரு மூத்த காவல்துறை அதிகாரி கூறியதாவது, “நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. தற்போது நிலைமை அமைதியாக உள்ளது. எந்தவித விரும்பத்தகாத சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன,” என்று கூறினார்.

அதாவது, ஏவிபாவே பகுதியில் உள்ள ஜனார்த்தன ரெட்டியின் இல்லத்தின் முன்பு பாரத் ரெட்டியின் ஆதரவாளர்கள் ஒரு பதாகையை வைக்க முயன்றனர். இதற்கு ஜனார்த்தன ரெட்டியின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது ஒரு கடுமையான வாக்குவாதத்தில் முடிந்தது. ஆரம்பத்தில் வாய்மொழி மோதலாகத் தொடங்கிய இது, விரைவில் கைகலப்பாக மாறியது. இரு தரப்பு ஆதரவாளர்களும் கற்களை வீசியதாகக் கூறப்படுகிறது. நிலைமையைக் கட்டுப்படுத்த சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மீதும் கற்கள் வீசப்பட்டதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

நிலைமை மோசமடையக்கூடும் என்று அஞ்சி, கூட்டத்தைக் கலைத்து ஒழுங்கை நிலைநாட்ட காவல்துறை தடியடி நடத்தியதுடன், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். மேலும், குற்றச்சாட்டுகளைச் சரிபார்க்க விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version