“தங்கம் வாங்குங்கள்” என்ற அறிவுரையை தான் இதுவரை இந்தியர்கள் பல ஆண்டுகளாகக் கேட்டு வந்துள்ளனர். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. “தங்கத்தை விற்பதற்கு இதுதான் சரியான நேரம்” என்ற மனநிலை பல குடும்பங்களில் உருவாகியுள்ளது. இதனால் நாடு முழுவதும் பழைய நகைகளை விற்கும் போக்கு கணிசமாக அதிகரித்துள்ளது.
மக்கள் ஏன் இந்த முடிவை எடுக்கிறார்கள் என்பதன் பின்னணியில் உள்ள முக்கியக் காரணங்களை இங்கு விரிவாகப் பார்ப்போம்.
உலக அளவில் தங்கம் என்பது வெறும் ஆபரணம் மட்டுமல்ல, அது ஒரு மிகச்சிறந்த முதலீடாகவும் அவசரக் கால நிதிப் பாதுகாப்பாகவும் பார்க்கப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை, சமீபத்திய வாரங்களாகக் கடுமையான சரிவைச் சந்தித்து வருகிறது.
விலை உயர்வும் சரிவு பற்றிய பயமும்
சமீபத்தில் தங்கம் 10 கிராமுக்கு சுமார் ரூ. 1.4 லட்சம் என்ற வரலாற்று உச்சத்தைத் தொட்டது. ஆனால் தற்போதைய சந்தை நிலவரப்படி, இந்த விலை மேலும் சரிந்து ரூ. 1.2 லட்சம் வரை குறையக்கூடும் என்று சந்தை வல்லுநர்கள் கணிக்கின்றனர். இதனால், தங்கம் தனது உச்ச விலையை எட்டிவிட்டது, இனி விலை குறையும் என்று நம்பும் நுகர்வோர்கள், தங்களிடம் உள்ள பழைய நகைகளை விற்று லாபத்தை ஈட்ட (Profit-Booking) முற்படுகின்றனர். “இந்திய நுகர்வோர்கள் தங்கத்தின் தற்போதைய அதிக விலையைப் பயன்படுத்தி, தங்களுக்குத் தேவையான உடனடிப் பணப்புழக்கத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள்” என்று இந்தியத் தங்கக் கட்டிகள் மற்றும் ஆபரண வர்த்தகர்கள் சங்கத்தின் (IBJA) தேசியச் செயலாளர் சுரேந்திர மேத்தா தெரிவித்துள்ளார்.
உலகளாவிய பொருளாதாரக் காரணிகள்
சர்வதேச சந்தையிலும் தங்கத்தின் விலை கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. இதற்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன.
முதலவாது, அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள புதிய பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இரண்டாவதாக, அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி (US Federal Reserve) வட்டி விகிதங்களை மேலும் உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
பொதுவாக, வட்டி விகிதங்கள் உயரும்போது முதலீட்டாளர்கள் நிலையான வருமானம் தரும் வட்டி சார்ந்த சொத்துக்களை நோக்கி நகர்வார்கள். தங்கம் எந்தவித நிலையான வட்டி வருமானத்தையும் தராததால், சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதான முதலீடுகளைக் குறைத்து வருவது விலைச் சரிவுக்கு வழிவகுத்துள்ளது.
புதிய உச்சத்தைத் தொடும் ‘தங்க மறுசுழற்சி’
மக்களின் இந்த விற்பனைப் போக்கு, இந்தியாவின் ஒழுங்கமைக்கப்பட்ட தங்க மறுசுழற்சித் துறைக்கு (Organized Gold Recycling Industry) பெரும் ஊக்கத்தை அளித்துள்ளது. வங்கிகளின் லாக்கர்களில் முடங்கிக் கிடந்த பழைய நகைகள், இப்போது முறைப்படியான பொருளாதாரத்திற்குள் கொண்டு வரப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, புதிய நகை உற்பத்தியாளர்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன.
உதாரணமாக, ‘முத்தூட் எக்சிம்’ நிறுவனத்தின் 100-க்கும் மேற்பட்ட ‘கோல்டு பாயிண்ட்’ மையங்களில் பழைய தங்கத்தின் வரத்து 40% அதிகரித்துள்ளது என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி கேயூர் ஷா தெரிவித்துள்ளார். நுகர்வோர்கள் இப்போது வெளிப்படையான, ஒழுங்கமைக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் தங்கத்தை விற்கப் பழகிவிட்டனர் என்பதை இது காட்டுகிறது.
இந்தியப் பொருளாதாரத்திற்கு இது ஏன் முக்கியம்?
இந்தியா, உலகிலேயே தங்கம் நுகர்வில் முன்னணி நாடாக இருந்தாலும், நமக்குத் தேவையான பெரும்பாலான தங்கத்தை நாம் இறக்குமதி (Import) தான் செய்கிறோம். கடந்த 2026 ஆம் நிதியாண்டில் மட்டும் இந்தியா சுமார் $72.4 பில்லியன் மதிப்பிலான தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது.
கடந்த 2025-ஆம் ஆண்டில் மறுசுழற்சி செய்யப்பட்ட தங்கம் மூலம் 125-150 டன்கள் உள்நாட்டிலேயே கிடைத்தது. இந்த ஆண்டு இந்த வரத்து 200-250 டன்களாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியக் குடும்பங்களிடம் மொத்தம் சுமார் 30,000 டன் தங்கம் முடங்கிக் கிடப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், முறையான தங்கம் மறுசுழற்சி அதிகரிப்பது இந்தியாவின் இறக்குமதிச் சுமையைக் குறைப்பதுடன், நுகர்வோரின் முடங்கிய சொத்துக்கான மதிப்பையும் மீட்டெடுக்க உதவும்.
நீங்களும் உங்களது தங்கத்தை விற்க வேண்டுமா?
இதற்கு ஒரே பதில் இல்லை. உங்களிடம் பயன்படுத்தாத பழைய நகைகள் இருந்தால், தற்போதைய உயர்ந்த விலையில் அவற்றை பணமாக மாற்றுவது சரியான முடிவாக இருக்கலாம். ஆனால் முதலீட்டு நோக்கில் வாங்கிய தங்கத்தை வெறும் விலை ஏற்ற இறக்கத்தை பார்த்து விற்பது சரியான அணுகுமுறை அல்ல என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள்.
பயன்படாத பழைய நகைகள் இருந்தால், இந்த அதிக விலை சூழலைப் பயன்படுத்திப் பணமாக்கலாம். ஆனால், நீண்ட கால முதலீட்டாளர்களைப் பொறுத்தவரை, பணவீக்கம் (Inflation) மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு எதிரான ஒரு சிறந்த அரணாகத் தங்கம் விளங்குவதால், அதனைத் தொடர்ந்து வைத்திருப்பதே பாதுகாப்பானது.
-பா. முகிலன்
