கர்நாடகாவில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ஆசிரியை காதலித்த இளைஞர், ஆசிரியை காதலை ஏற்றுக் கொள்ளாததால் கத்தியால் குத்தி தாலி கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம், எலிகெரேயை சேர்ந்தவர் பூர்ணிமா. திருமணமான இவர், கணவரை பிரிந்து மைசூரில் தங்கி தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். அதேப் போல் கியதனஹள்ளி கிராமத்தை சேர்ந்த அபிஷேக் என்பவர், பூர்ணிமாவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்துள்ளார். அன்று முதல் பூர்ணிமாவை காதலிப்பதாக கூறி வந்துள்ளார்.
அதற்கு பூர்ணிமா மறுப்பு தெரிவித்தும், பின்தொடர்ந்து வந்த அபிஷேக், தனது காதலை ஏற்றுக் கொள்ளும் படி வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் தன்னை விட வயது குறைவு என்பதால், அபிஷேக்கின் காதலை ஏற்க முடியாது என பூர்ணிமா தொடர்ந்து கூறி வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 4-ம் தேதி பூர்ணிமாவை சந்தித்த அபிஷேக், பூர்ணிமாவை, லட்சுமிபுரம் பகுதியில் உள்ள அம்பேத்கர் பூங்காவிற்கு அழைத்து சென்று, தன்னை காதலிக்கும் படி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அப்போதும் பூர்ணிமா அதனை மறுக்க, இதனால் ஆத்திரமடைந்த அபிஷேக், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பூர்ணிமாவின் வயிற்றில் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதில் நிலைக்குலைந்த பூர்ணிமா ரத்த வெள்ளத்தில் கீழே சரிய, அதிர்ச்சியடைந்த அபிஷேக், பூர்ணிமாவை தனியார் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, அங்கிருந்து தப்பியோடினார். தகவல் அறிந்த லட்சுமிபுரம் போலீசார், மருத்துவமனை சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். அபிஷேக் கத்தியால் குத்தியதும், கீழே சரிந்து விழுந்த பூர்ணிமாவின் கழுத்தில் தாலி கட்டியுள்ளார் அபிஷேக். அதனை புகைப்படம் எடுத்து தனது வாட்ஸ் அப் மற்றும், பூர்ணிமாவின் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் ஆக வைத்தது தெரியவந்தது.
இதனையடுத்து நேற்று காலை அபிஷேக்கை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பூர்ணிமா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கைதான அபிஷேக்கிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
