உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் நீர்சந்தி ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகச் செல்லும் கப்பல்களுக்குக் கட்டணம் வசூலிக்கும் புதிய சட்ட மசோதாவை ஈரான் நாடாளுமன்றம் தயாரித்து வருகிறது. இந்த நீர்சந்தி வழியாகத்தான் உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் மற்றும் எல்.பி.ஜி (LPG) விநியோகம் நடைபெறுகிறது. “பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு” என்ற பெயரில் ஈரான் கொண்டு வரவுள்ள இந்த வரி விதிப்பு, சர்வதேச கடல்சார் சட்டங்களுக்கு எதிரானது எனப் பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையிலும், தனது இறையாண்மையைப் பயன்படுத்திக் கட்டணம் வசூலிப்பதில் ஈரான் உறுதியாக உள்ளது.
இந்த முடிவால் இந்தியா போன்ற இறக்குமதி நாடுகளுக்குப் பெரும் பொருளாதாரச் சுமை ஏற்படும் என அஞ்சப்படுகிறது. இந்தியாவின் 60 சதவீத சமையல் எரிவாயு (LPG) மற்றும் கணிசமான கச்சா எண்ணெய் இந்த வழியாகவே வருகிறது. ஏற்கனவே போர் காரணமாகக் காப்பீட்டுத் தொகை மற்றும் சரக்குக் கட்டணம் உயர்ந்துள்ள நிலையில், ஈரானின் இந்தப் புதிய ‘டிரான்சிட் கட்டணம்’ அமலுக்கு வந்தால், ஒரு சிலிண்டர் எரிவாயுவின் விலை மேலும் உயரக்கூடும். இருப்பினும், இந்தியா போன்ற “நட்பு நாடுகளுக்கு” ஈரான் சில விலக்குகளை அளிக்கக்கூடும் எனத் தகவல்கள் வெளியானாலும், அதிகாரப்பூர்வமாக இந்தியக் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் இத்தகைய கட்டணங்களை ஏற்க முடியாது எனத் தெரிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் இதன் தாக்கம் இப்போதே எதிரொலிக்கத் தொடங்கிவிட்டது. பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 114 டாலர்களைக் கடந்து உயர்ந்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, எல்.பி.ஜி தட்டுப்பாட்டைத் தவிர்க்க அமெரிக்கா போன்ற மாற்று நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்ய அரசு திட்டமிட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
