கலைகளின் சங்கமமாகப் பார்க்கப்படும் 98-வது ஆஸ்கர் விருது விழா, இந்த ஆண்டு வெறும் கொண்டாட்டமாக மட்டுமின்றி, உலக அமைதிக்கான ஒரு முக்கிய மேடையாகவும் மாறியுள்ளது. பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேவியர் பார்டெம் (Javier Bardem), பாலஸ்தீன விடுதலைக்காக ஆஸ்கர் மேடையிலேயே குரல் எழுப்பியது உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது.
சிறந்த சர்வதேசத் திரைப்படத்திற்கான (Best International Feature Film) விருதை வழங்க, இந்திய நடிகை பிரியங்கா சோப்ராவுடன் ஜேவியர் பார்டெம் மேடைக்கு வந்தார். அப்போது மைக் முன் நின்ற அவர், விருது அறிவிப்புக்கு முன்னதாக மிகவும் தீர்க்கமாக, “போர் வேண்டாம்; பாலஸ்தீனம் விடுதலை பெறட்டும்!” (Stop the war; Let Palestine be free) என்று முழக்கமிட்டார்.
https://x.com/arikbeyhive/status/2033364032280015358
அவர் பேசிய அந்த நிமிடம், அரங்கில் இருந்த உலகப் புகழ்பெற்ற கலைஞர்கள் அனைவரும் ஒரு கணம் திகைத்துப் போயினர். பின்னர் அரங்கமே அதிரும் வகையில் கைதட்டல்கள் ஒலிக்கத் தொடங்கின.
முன்னதாக ரெட் கார்ப்பட் மற்றும் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜேவியர் பார்டெம், தற்போதைய உலக அரசியல் நிலை குறித்து மிகவும் காட்டமாகப் பேசினார். அதில், “நாம் ஒரு மிக மோசமான காலகட்டத்தில் இருக்கிறோம். அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆகியோரால் உருவாக்கப்பட்ட ஒரு சட்டவிரோதப் போர் நடந்து கொண்டிருக்கிறது. அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை நாம் வேடிக்கை பார்க்க முடியாது,” என்று அவர் நேரடியாகக் குற்றம் சாட்டினார்.
சர்வதேசத் திரைப்படங்களுக்கான விருதை வழங்க வந்த இடத்தில், சர்வதேசப் பிரச்சனையைப் பற்றிப் பேசிய ஜேவியரின் துணிச்சலைச் சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.
