இந்தியா ரஷ்யாவிலிருந்து பெரும் அளவு கச்சா எண்ணெய் மற்றும் ராணுவப் பொருட்களை வாங்குவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 50% வரி விதித்துள்ள நிலையில், இந்தியாவும் பதிலடி கொடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டுக்காக, பிரதமர் மோடி சீனாவுக்கு சென்றார். அங்கு ரஷிய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஜின்பிங், பிரதமர் மோடி ஆகியோர் சிரித்து பேசியிருந்தனர். 3 பேருக்கும் இடையே நிலவிய நெருக்கம், அமெரிக்காவை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

3 தலைவர்களின் சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ, “3 பேரின் சந்திப்பு வெறுப்பூட்டுவதாக இருக்கிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவரான பிரதமர் மோடி, உலகின் 2 மிகப்பெரும் சர்வாதிகாரிகளான புதின், ஜின்பிங் ஆகியோருடன் ஒன்றாக காணப்பட்டது வெட்கக்கேடானது. அதில் எந்த அர்த்தமும் இல்லை.

இந்திய தலைவர் மோடி, தான் இருக்க வேண்டியது அமெரிக்கா, ஐரோப்பா, உக்ரைன் ஆகிய நாடுகளுடன்தான், ரஷியாவுடன் அல்ல என்பதை புரிந்து கொள்வார் என்று நம்புகிறோம். அவர் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டியது அவசியம். பாகிஸ்தான் ராணுவத்துக்கு சீனா நிதியுதவி செய்துள்ளது. பாகிஸ்தான் அணுஆயுதங்கள் தயாரிக்கவும் உதவியது. இந்தியாவுக்குள் சீனா திரும்பத்திரும்ப ஊடுருவி உள்ளது. குறிப்பாக, அக்சாய் சின் பகுதியில் ஊடுருவியது. இந்திய நிலப்பரப்பை கைப்பற்றி, இன்னும் தன்வசம் வைத்துள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியில் சீனா ரோந்து செல்கிறது. இந்திய பெருங்கடலில் இந்திய இறையாண்மைக்கே சவால் விடுகிறது.

அதே நேரத்தில், சீனாவும், அதன் தொழில்முனைவோரும், எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தினரும் இந்திய தொழில் அதிபர்களுடன் கொஞ்சிக் குலவுகிறார்கள். அந்த உறவு நச்சுத்தன்மை கொண்டதாக உள்ளது. இந்தியாவை மிகப்பெரிய கப்பல் போக்குவரத்து மையமாக சீனா பயன்படுத்துகிறது.

உலகிலேயே அதிகமான வரி விதிக்கும் நாடு இந்தியாதான். ஆனால் அதை மறுத்து வருகிறது. நாங்கள் அளிக்கும் பணத்தை வைத்து ரஷியாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குகிறது. ரஷியா அந்த பணத்தில் நிறைய குண்டுகளையும், ஆயுதங்களையும், டிரோன்களையும் தயாரித்து, உக்ரைன் மக்களை கொல்கிறது.

ஜப்பான், கொரியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளைப் போல் இந்தியா எங்களுடன் வர்த்தகம் செய்வது இல்லை. தங்கள் இஷ்டம்போல் செயல்படலாம் என்று நினைக்கிறது. ஆனால் டிரம்ப் அதை அனுமதிக்க மாட்டார்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வெள்ளை மாளிகையில் இந்தியா மீதான வரிகளை மறுபரிசீலனை செய்வது குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், “நாங்கள் இந்தியாவுடன் நன்றாகப் பழகுகிறோம். ஆனால், பல ஆண்டுகளாக, அது ஒருதலைப்பட்ச உறவாக இருக்கிறது. இந்தியா எங்களிடம் மிகப்பெரிய வரிகளை வசூலித்து வருகிறது.

நாங்கள் இந்தியாவுடன் வியாபாரம் செய்யவில்லை.. அவர்கள் தான் எங்களுடன் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் நாங்கள் அவர்களிடம் முட்டாள்தனமாக கட்டணம் வசூலிக்கவில்லை. எனவே அவர்கள் தயாரித்த அனைத்தையும் அனுப்பி நமது நாட்டிற்குள் விற்பனை செய்கின்றனர். அவர்கள் எங்களிடம் 100 சதவீத வரிகளை வசூலித்ததால் நாங்கள் எந்த பொருட்களையும் அங்கு அனுப்ப மாட்டோம்.

எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு, எங்கள் வணிக நிறுவனங்கள் விற்க முடியாத அளவுக்கு அதிக வரிகளை அமெரிக்காவிடம் இருந்து இந்தியா வசூலித்துள்ளது. இது சிலருக்கு மட்டுமே புரிகிறது, நாங்கள் இந்தியாவுடன் மிகக் குறைந்த வணிகத்தைச் செய்கிறோம், ஆனால் அவர்கள் எங்களுடன் மிகப்பெரிய அளவிலான வணிகத்தைச் செய்கிறார்கள்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர்கள் எங்களுக்கு மிகப்பெரிய அளவிலான பொருட்களை விற்கிறார்கள், அவர்களின் மிகப்பெரிய “வாடிக்கையாளர்” நாங்கள்தான். ஆனால் நாங்கள் மிகக் குறைவாகவே விற்பனை செய்கிறோம். இது இன்றுவரை முற்றிலும் ஒருதலைப்பட்ச உறவு. அது பல தசாப்தங்களாக இருந்து வரும் பேரழிவு.

இந்தியா தனது கச்சா எண்ணெய் மற்றும் ராணுவப் பொருட்களை ரஷியாவிலிருந்து தான் பெரும் அளவு வாங்குகிறது. அமெரிக்காவிலிருந்து அது மிகக் குறைவு. அவர்கள் இப்போது தங்கள் வரிகளை ஒன்றுமில்லாமல் குறைக்க முன்வந்துள்ளனர், ஆனால் அது தாமதமாகிவிட்டது. அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே அதைச் செய்திருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version