ஈரான் தனது தொடர் போரின் போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுக்கும் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போர் வளைகுடா நாடுகளையும் பாதித்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், ஒரு மாதம் கடந்த பின்னரும், போர் முடிவுக்கு வருவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.
இருப்பினும் இந்த போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வளைகுடா நாடுகளில் உள்ள 8 பிரம்மாண்ட பாலங்களை இலக்கு வைத்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. அமெரிக்க-இஸ்ரேல் படைகள் ஈரானின் கர்ஜில் (Karaj) அமைந்துள்ள ஆசியாவின் மிக உயரமான பாலங்களில் ஒன்றான B1 பாலத்தை ஏவுகணை மூலம் தகர்த்ததற்குப் பதிலடியாக இந்த ‘ஹிட் லிஸ்ட்’ வெளியிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். சுமார் 100 பேர் படுகாயம்டைந்தனர்.
‘ஃபார்ஸ்’ (Fars) செய்தி முகமையின் தகவலின்படி, வளைகுடா நாடுகளிலும் ஜோர்டானிலும் உள்ள பல பிரபலமான பாலங்கள், ஈரானிய இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படையின் (IRGC) சாத்தியமான தாக்குதல் இலக்குகளாக அமையக்கூடும். ஈரானின் மிக உயரமான ‘B1’ பாலம் மீது நடத்தப்பட்ட இரண்டு தாக்குதல்களைத் தொடர்ந்து, அவர்களுக்கு ஒரு பாடம் புகட்ட ஈரான் திட்டமிட்டுள்ளது.
அந்த 8 பாலங்கள் என்னென்ன?அனடோலு (Anadolu) செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, ஈரானின் இலக்குப்பட்டியலில் குவைத்தின் ஷேக் ஜாபர் அல்-அஹமது அல்-சபா கடல் பாலம்; ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷேக் சயத் பாலம், அல் மக்தா பாலம் மற்றும் ஷேக் கலீஃபா பாலம்; சவுதி அரேபியாவை பஹ்ரைனுடன் இணைக்கும் கிங் ஃபஹத் இணைப்புப் பாலம்; மற்றும் ஜோர்டானின் கிங் ஹுசைன் பாலம், டாமியா பாலம் மற்றும் அப்தூன் பாலம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
