31 வருடங்களுக்கு முன்பு சென்னையில் ஆரம்பிக்கப்பட்டு இன்று அசுர வளர்ச்சியில் இயங்கி வரும் ஐடி நிறுவனம் தான் காக்னிசன்ட் ஐடி நிறுவனம். கிட்டத்தட்ட மூன்றரை லட்சம் ஊழியர்களை கொண்டு இயங்கி வரும் அந்த நிறுவனத்தின் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் ( நிறுவனத்தின் மொத்த பங்கு மதிப்பு ) 35 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். தற்பொழுது அந்த நிறுவனம் கொண்டு வந்துள்ள புதிய கட்டமைப்பு, அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
காக்னிசன்ட் நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களை கண்காணிக்கும் வகையில் அந்த நிறுவனம் புதிய கருவியை கையாளப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. ப்ரோஹேன்ஸ் என்ற பெயர் கொண்ட அக்கருவியை கொண்டு ஊழியர்கள் மடிகணினியில் அல்லது டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் வேலை செய்கிறார்களா அல்லது செய்யவில்லையா என்பதை அந்நிறுவனம் கண்காணிக்க போகிறது.
இந்தக் ப்ரோஹேன்ஸ் கருவியின் உதவியை கொண்டு ஊழியர்கள் பயன்படுத்தும் மவுஸ் அல்லது கீபோர்ட் வாயிலாக ஊழியர்களின் நடவடிக்கையை அந்நிறுவனம் கண்காணிக்கும். அதன்படி அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஐந்து நிமிடம் அதாவது 300 வினாடிகள் தொடர்ந்து மவுஸ் அல்லது கீபோர்டை பயன்படுத்தாமல் இருக்கும் பட்சத்தில் அவர் வேலை செய்யவில்லை என்ற முத்திரையை பெறுவார்.
மேலும் தொடர்ந்து 15 நிமிடங்கள் மடிகணினி அல்லது டெஸ்க்டாப் கம்ப்யூட்டரை பயன்படுத்தாமல் இருக்கும் பட்சத்தில், ஊழியர் கொடுக்கப்பட்ட வேலை செய்யாமல் வேறு தனிப்பட்ட செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் என்று முத்திரையை பெறுவார். இவ்வாறாக நிறுவனம் ப்ரோஹேன்ஸ் கருவியின் உதவி கொண்டு ஊழியர்கள் அனைவரையும் தொடர்ந்து கண்காணிக்க போகிறது.
இச்செய்தி இன்று வெளிப்படையாக எல்லோருக்கும் தெரிய வர, அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் பதற்றத்தில் உள்ளனர். இதேபோன்று மற்ற நிறுவனங்களும் பின்பற்ற ஆரம்பித்தால் நம் நிலைமை என்ன ஆகும் என்று மற்ற நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களும் சற்று அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும்.
