அடுத்த 30 நாட்களுக்குள் வெனிசுலாவில் புதிய தேர்தல்களை நடத்த சாத்தியமில்லை என்று என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்கா நிக்கோலஸ் மதுரோவை ஆபரேஷன் அப்சலூட் ரிசால்வ்வின் ஒரு பகுதியாக கைது செய்தது. அவர் அமெரிக்காவிற்கு அழைத்து வரப்பட்டு நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மதுரோ மீது கடுமையான போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் பயங்கரவாத குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்தநிலையில், NBC செய்திக்கு டிரம்ப் அளித்த பேட்டியில், வெனிசுலாவின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால் தேர்தல்களை நடத்துவது சாத்தியமில்லை என்று அதிபர் டிரம்ப் கூறினார். “முதலில் நாம் நாட்டை சரிசெய்ய வேண்டும். மக்கள் இப்போது வாக்களிக்கக் கூட முடியாது” என்று அவர் கூறினார்.
வெனிசுலாவின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப
அமெரிக்கா செயல்பட்டு வருவதாக டிரம்ப் கூறினார் . குறிப்பாக, நாட்டின் எண்ணெய் துறையை மீண்டும் தொடங்குவதற்கான திட்டங்கள் நடந்து வருகின்றன. இதற்கு அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களின் உதவி தேவைப்படலாம், மேலும் அரசாங்கம் அவர்களின் செலவுகளுக்கு திருப்பிச் செலுத்தும். வெனிசுலா உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்புகளைக் கொண்டுள்ளது, ஆனால் மோசமான கொள்கைகள், தடைகள் மற்றும் மோசமான உள்கட்டமைப்பு ஆகியவை எண்ணெய் உற்பத்தியைக் கணிசமாகக் குறைத்துள்ளன.
அமெரிக்கா வெனிசுலாவுடன் போரில் ஈடுபடவில்லை என்று டிரம்ப் கூறினார். அமெரிக்கா வெனிசுலா மக்களுக்கு எதிராக அல்ல, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் சர்வதேச குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் தெளிவுபடுத்தினார். வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத், வெள்ளை மாளிகை அதிகாரி ஸ்டீபன் மில்லர் மற்றும் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் ஆகியோர் வெனிசுலா தொடர்பான விஷயங்களைக் கையாள்வார்கள் என்று டிரம்ப் கூறினார்.
மேலும் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றுள்ள டெல்சி ரோட்ரிகஸிடம், போதைப்பொருள் கடத்தலை நிறுத்த வேண்டும், அமெரிக்காவிற்கு எதிரான நாடுகளைச் சேர்ந்த மக்களை வெளியேற்ற வேண்டும், இறுதியாக சுதந்திரமான தேர்தல்களை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளதாகத் தெரிகிறது.
