அமெரிக்காவில் அகங்காரம் vs பிடிவாதம்! நீடிக்கும் எலான் மஸ்க் – டொனால்ட் டிரம்ப் மோதலின் பின்னணி!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும், தொழிலதிபர் எலான் மஸ்க்கிற்கும் கடந்த சில நாட்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. அகங்கார தலைவரும், பிடிவாத தொழிலதிபரும் நீயா நானா என மோதிக் கொள்ளும் போக்கு, அமெரிக்க அரசியலில் முக்கிய பேசுபொருள் ஆகியுள்ளது. அதன் பின்னணியை அறிந்துகொள்வோம்.

டிரம்ப்பும் மஸ்க்கும்

அமெரிக்காவில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதில் உலகப் பணக்காரர்களில் முதன்மை இடத்திலுள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் போட்டியிட நினைத்தார். ஆனால் அவருக்கு அமெரிக்கக் குடியுரிமை இல்லாததால் தேர்தலில் பங்கேற்க முடியவில்லை. உடனே, தனக்கு சாதகமான டொனால்ட் டிரம்ப்பை ஆதரிக்கத் தொடங்கினார். ஒரு காலத்தில் தீவிர இடதுசாரியாக இருந்த மஸ்க், திடீரென வலதுசாரிக்கு ஆதரவானார். அக்டோபர் மாதம் 27-ம் தேதி நியூயார்க்கில் நடந்த மேடிசன் ஸ்கொயர் கார்டன் பேரணியில் எலான் மஸ்க் கலந்துகொண்டு டிரம்ப்பை ஆதரித்துப் பேசினார். தொடர்ந்து பிலடெல்பியாவில் ஒரு பள்ளியில் உரையாற்றியபோதும் டிரம்பை ஆதரித்து, “அமெரிக்காவின் எதிர்காலமும் நாகரிகமும் கேள்விக்குறியாகி இருக்கிறது. அமெரிக்காவை மீண்டும் சிறப்பானதாக ஆக்க டிரம்ப்புக்கு வாக்களிக்க வேண்டும்” என்றார். இதனால் உச்சி குளிர்ந்த டிரம்ப், மஸ்க்கை தன் குடும்பத்தில் ஒருவர் போலக் கருதினார். குடும்பக் குழு படத்தில் இடம்பெறும் அளவுக்கு இவர்கள் நட்பு போனது. இருவரும் தோளில் கை போட்டு, ‘முஸ்தபா முஸ்தபா’ பாடாத குறைதான். ஆட்சி அமைத்ததும் எலான் மஸ்கிற்கு அரசாங்கத் திறன் துறை தலைவர் பொறுப்பையும் டிரம்ப் வழங்கினார். ஆனால் அதுதான் பிரச்னை ஆகும் என டிரம்ப் நினைக்கவில்லை.

என்னதான் பிரச்னை

அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சகத்தை பென்டகன் என்று அழைப்பதுண்டு. அங்கிருந்து ராணுவ ரகசியங்கள் கசிந்துவிட்டதாக அண்மையில் புகார் வைக்கப்பட்டது. இது பொய் என்று அதிபர் டிரம்ப் மறுத்தார். ஆனால் அது பொய் அல்ல உண்மை என்றும், பென்டகன் அந்த ரகசியங்களை எலான் மஸ்க்கிடம் தெரிவித்ததாகவும் செய்திகள் கிளம்பின. குறிப்பாக சீனாவைத் தாக்குவது குறித்தும், அதற்கான ஆயுதப் பின்புலம் குறித்தும் எலான் மஸ்க்கிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது. இதனால் கடுப்பான டிரம்ப், எலான் மஸ்க்கிடம் எதற்காக இதையெல்லாம் பேசினீர்கள் எனச் சாடியதாகத் தெரிகிறது. அங்கு தொடங்கிய பனிப்போர், டிரம்ப்பை மஸ்க் மிரட்டும் அளவுக்கு பூதாகாரமாக வளர்ந்திருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஈகோ ஹர்ட் ஆன எலான் மஸ்க் அரசியலிலிருந்து விலகப் போவதாக அறிவித்தார்.

அரசியலிலிருந்து விலகுகிறாரா மஸ்க்?

அரசியலுக்காக நான் நிறைய செலவழித்துவிட்டேன். அதை நிறுத்தப் போகிறேன். அல்லது அடியோடு குறைக்கப் போகிறேன் என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார். தனக்குத் தனிப்பட்ட வகையில் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல்களாலும், டெஸ்லா பங்குகளின் சரிவு காரணமாகவும்தான் மஸ்க் இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்று பேசப்படும் நிலையில், டிரம்ப்பின் செயலால் மஸ்க் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், கடந்த ஜூன் மூன்றாம் தேதி அமெரிக்காவின் வரிக்குறைப்பு மசோதாவை டிரம்ப் வெளியிட்டார். அதை நாட்டின் கடனை அதிகரிக்கும் மசோதா என்று எலான் மஸ்க் கடுமையாக விமர்சித்தார். அதைத்தொடர்ந்து டிரம்ப்பின் மீது எலான் மஸ்க் பலவிதமான குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் முன்வைக்க போவதாக தொடர்ந்து சமூக ஊடகங்களில் தெரிவித்து வருகிறார். இது குடியரசு கட்சிக்குள்ளே சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நேரலையில் கருத்து மோதல்

எலான் மஸ்கின் கருத்துகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜூன் 5ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மின் சாதன வாகனங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படாத காரணத்தால்தான் மஸ்க் அதிருப்தியில் பேசி வருகிறார் என்று விமர்சித்தார். அப்போது உடனே, நான் ஆதரவு தந்திராவிட்டால் டிரம்ப் தேர்தலில் ஜெயித்திருக்க மாட்டார் என்று மஸ்க் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அவரை நன்றி மறந்தவர் என்றும் மஸ்க் விமர்சித்தார். இது இருவருக்கு இடையிலான மோதலை மேலும் வலுப்படுத்தியது.

அடி வாங்கிய புலி

எலான் மஸ்க் இப்படி எல்லாம் பேசியதற்கு எதிர்வினையாக சந்தையில் ஒரே நாளில் டெஸ்லா பங்குகள் 150 பில்லியன் டாலர் மதிப்பு குறைந்தது. அவரது தனிப்பட்ட சொத்துகள் சுமார் 25 பில்லியன் டாலர் குறைந்தது. இதனால் நேரடியாக இழப்புகளை எலான் மஸ்க் சந்திக்க தொடங்கினார். இதனால் கடுப்பான அவர், டிரம்ப் பதவி விலக வேண்டும் என்று பதிவிடப்பட்ட கருத்து ஒன்றை ஆமோதித்து பதிவு போட்டார். மேலும் புதிய கட்சி தொடங்க வேண்டிய அவசியம் வந்துவிட்டதா என்று எக்ஸ் தளத்தில் வாக்கெடுப்பு ஒன்றையும் நடத்தினார். எலான் மஸ்க்கின் இந்த செயல் அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

முதல் பணக்காரர் Vs முதன்மைத் தலைவர்

எலான் மஸ்க் உலகத்தின் நம்பர் ஒன் பணக்காரர் ஆவார். மிகப் பிடிவாத குணம் கொண்டவர் என்றும் பார்க்கப்படுகிறார். மறுபுறம், உலகின் சக்தி வாய்ந்த நாடான அமெரிக்காவின் முதன்மையான தலைவராக இருக்கிறார் டொனால்ட் டிரம்ப். இவர்கள் இருவருக்கும் இடையிலான மோதல் போக்கு, அமெரிக்கா மட்டுமின்றி உலக அரசியலில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என்று அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எலான் மஸ்க் நேரிடையாகவே டிரம்ப்புக்கு எதிரான சக்தியாக உருவெடுக்க திட்டமிட்டு இருக்கிறார் என்றும், பல நாடுகளுடனான தனது உறவுகளை வலுப்படுத்த முயல்கிறார் என்றும் வல்லுனர்கள் கூறுகின்றனர். அண்மையில் எலான் மஸ்கின் ஸ்டார் நெட் இணையதளம் இந்தியாவில் இயங்க அனுமதி கிடைத்திருப்பதும் அவரது முக்கியமான முன்னெடுப்பு என்று சொல்கின்றனர்.
உள்ளூர் முதல் உலக அரசியல் வரை முற்றிலும் பணத்தால் கட்டுப்படுத்தப்படும் போது, அதை பெருமளவில் தன் பலமாக வைத்திருக்கும் எலான் மஸ்க் என்ன செய்தாலும் அது உலக அரசியலில் குறிப்பிடத்தக்கதாக அமையும் என்பது மட்டும் உள்ளங்கை நெல்லிக்கனி.

Share.
Leave A Reply

Exit mobile version