ரஜினிகாந்தின் 171-வது படமாக உருவாகியுள்ள ‘கூலி’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ரஜினியுடன் சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சவுபின் சாஹிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தி நடிகர் ஆமிர்கான், சிறப்பு தோற்றத்தில் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். தற்போது, இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம் வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும்.
இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருப்பதை ஆமிர்கான் உறுதிப்படுத்தியுள்ளார். வரும் ஜூன் 20-ஆம் தேதி வெளியாக உள்ள ‘சித்தாரே ஜமீன் பர்’ படத்தின் பிரமோஷனில் கலந்துகொண்ட போது, “லோகேஷ் இயக்கும் ஒரு பிரம்மாண்டமான சூப்பர் ஹீரோ படத்தில் நான் நடிக்க இருக்கிறேன். அதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கும்,” என்று கூறியுள்ளார்.
முன்பே, லோகேஷ் கனகராஜ், ‘இரும்பு கை மாயாவி’ என்ற சூப்பர் ஹீரோ கதையை உருவாக்கவிருக்கிறார், அதில் நடிகர் சூர்யா நடிப்பார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது.