ஒரு திரைப்படத்தை உருவாக்குவது என்பது எவ்வளவு கடினம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதிலும், இந்த தேதியில் படம் வெளியாகப் போகிறது என முன்கூட்டியே அறிவித்து விட்டு படம் எடுப்பது மிகவும் சவாலான ஒன்று. அப்படி தேதியை அறிவித்து விட்டு வெளியாக முடியாமல் போன படங்கள் பல. அப்படி தேதியை குறிப்பிட்டு விட்டு பிறகு வெளியாகும் படங்களுக்கு பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் மிகவும் அடிப்பட்டு போகும். குறிப்பாக பாலையாவின் அகாண்டா 2 படம் டிசம்பர் மாதம் வெளியாக இருந்தது, பிறகு தள்ளிப்போனது. அதனால் அப்படத்தின் கலெக்ஷனும் குறைந்ததாக கூறப்பட்டது. அவ்வளவு ஏன்? கோலிவுட்டில் விஜய்யின் கடைசிப் படமான ஜனநாயகன் படம் பொங்கலுக்கு வெளியாகும் எனக் அறிவிக்கப்பட்ட நிலையில், ஒரு மாதம் ஆகியும் வெளிவர முடியாமல் கிடப்பில் கிடக்கிறது.
இங்கு நிலைமை இப்படி இருக்க ஹாலிவுட்டில் 100 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகக் கூடிய படம் ஒன்றை 2015-லேயே எடுத்து பத்திரமாக பூட்டி வைத்துள்ளார்களாம். ராபர்ட் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் ஜான் மல்கோவிச் நடிப்பில் உருவாகியுள்ள “100 YEARS” என்ற தலைப்பிலான படம் 2115-ம் ஆண்டு வெளியாகவுள்ளதாம். 2115-ல் நடக்கும் விஷயங்கள், சவால்கள் பற்றி சயின்ஸ் பிக்சன் கதையில் இப்படம் உருவாகியுள்ளதாம்.
2015-ம் ஆண்டு தயாரான இப்படத்தை 2115-ம் ஆண்டு நவம்பர் 18-ம் தேதி ரிலீஸ் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளனர். ’நீங்கள் பார்க்கவே முடியாத திரைப்படம்’ என்ற டேக்லைன் உடன் இதனை விளம்பரப்படுத்தவும் செய்துள்ளனர். 2115-ல் இப்படத்தை பார்ப்பவர்கள் 100 ஆண்டுகளுக்கு முன்பே இப்போது நடப்பது போல் கற்பனை செய்துள்ளார்களே என அன்றைய தலைமுறை ஆச்சர்யப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த வித்தியாசமான யுக்தியை செயல்படுத்தி உள்ளனர்.
மிகவும் ரகசியமான, பாதுகாப்பான இடத்தில் துப்பாக்கி குண்டுகள் துளைக்காத லாக்கரில் இப்படத்தின் காப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த லாக்கரில் 100 ஆண்டுக்கான டைமர் பொருத்தப்பட்டுள்ளது. 100 ஆண்டுகளுக்கு பிறகு தானாகவே அன்லாக் ஆகும் படி அது செட் செய்யப்பட்டுள்ளது. இதனை அறிவிக்கும் விதமாக ரெட்ரோ, இயற்கை, எதிர்காலம் என மூன்று விதமான டீசர்களை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த டீசரில் உள்ள காட்சிகள் படத்தில் இருக்காது எனவும் தெரிவித்துள்ளது.
