தந்தை – மகன் இருவருக்கும் இடையேயான பிரச்சனையின் காரணமாக பிளவுபட்ட பாமக இப்போது அன்புமணி வசம் உள்ளது. இந்நிலையில் மாம்பழம் சின்னத்திற்காக போட்டியின் முடிவும் அன்புமணிக்கே சாதகமாகியுள்ளது. இத்தகைய நிலையில் PLAN ‘B’ ஆக தனது ஆதரவாளர் மூலம் புதுக்கட்சி துவங்கியுள்ளார் ராமதாஸ்.

பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் ஆதரவாளரான, தலைமை நிலையைச் செயலர் அன்பழகனின் மகன் முகிலன் தலைமையில் “அய்யா பாட்டாளி மக்கள் கட்சி” என்ற பெயரில் புதுக்கட்சியை உருவாக்கி உள்ளார். தற்போது இருக்கும் பாமக கொடியில் நடுவில் ராமதாஸ் படத்தை வைத்தது கொடி தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த கட்சியை பதிவு செய்ய தேர்தல் கமிஷனிடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக மகன் அன்புமணியால் கட்சி பிளவுபட்டது; பின் மகனிடம் கட்சி சென்றது; மாம்பழ சின்னம் அன்புமணிக்கு தான் என தேர்தல் ஆணையமும் நீதிமன்றமும் கூறிய நிலையில் கடுங்கோபத்தில் இருக்கும் ராமதாஸ், அன்புமணி&கோவிற்கு எதிராக தனது ஆதரவாளர்களை நிறுத்த முடிவெடுத்துள்ளார். அதன் வெளிப்பாடே இந்த புதுக்கட்சி என்கிறது தைலாபுர வட்டார தகவல்.

சில நாட்களுக்கு முன்பு, “கட்சியிலிருந்து அன்புமணியை நீக்குகிறேன். அவர் வேண்டுமானால் புதுக்கட்சி தொடங்கிக்கொள்ளலாம்” என அறிவித்திருந்தார் ராமதாஸ். ஆனால், தற்போது தனது ஆதரவாளர் பெயரில் ராமதாஸ் புதுக்கட்சி துவங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க, “அய்யாவை சில துரோகிகள் தவறாக வழி நடத்துகிறார்கள்” என கூறியிருந்தார். மொத்தத்தில் தந்தை – மகன் இடையிலான மோதலால் வன்னியர் சமூக வாக்கு வங்கி சிதறி பாமகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் சூழல் உருவாகியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version