ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் தீவிரமடைந்துள்ள சூழலில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியுள்ளது. இதனால் உலகளாவிய எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டு கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த அழைப்பை ஏற்று ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் இப்போது களமிறங்கியுள்ளன. பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளுடன் இணைந்து ஜப்பான் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், ஹார்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யத் தாங்கள் தயார் என அறிவித்துள்ளன.
ஈரான் அண்மையில் வணிகக் கப்பல்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடத்திய தாக்குதல்களை இந்தக் கூட்டணி நாடுகள் வன்மையாகக் கண்டித்துள்ளன. கடலில் கண்ணிவெடிகளை வைப்பது, ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்துவது போன்ற நடவடிக்கைகளை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என அவை வலியுறுத்தியுள்ளன. சர்வதேசச் சட்டங்களின்படி கடல்சார் சுதந்திரம் என்பது அனைத்து நாடுகளுக்குமான அடிப்படை உரிமை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள இந்த நாடுகள், ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் 2817-ஐ ஈரான் பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளன.
இந்தக் கூட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சர்வதேச எரிசக்தி சந்தையை நிலைப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும், எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க உற்பத்தியாளர் நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
