ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் முஸ்லிம் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்திகள்: முதல்வர் ஸ்டாலின்:
“நோன்பை முடித்து, புத்தாடை அணிந்து, அன்பை அனைவரோடும் பகிர்ந்து கொள்ளும் இஸ்லாமிய உடன்பிறப்புகள் அனைவருக்கும் உங்களில் ஒருவனின் இனிய ரமலான் நல்வாழ்த்துகள்.
வரலாற்றில் நாம் கண்ட பெரும் புரட்சியாளர்களில் ஒருவரும், சமத்துவத்தின் திருவிளக்குமான நபிகள் நாயகத்தின் நெறியில் வாழ்ந்து வரும் இசுலாமியச் சகோதரர்களுக்கு என்றும் அரணாக நமது திராவிட முன்னேற்றக் கழகமும், கழக அரசும் திகழ்ந்து வருகின்றது. கல்வி, வேலைவாய்ப்புகள், பொருளாதாரம், அரசியல் பிரதிநிதித்துவம், மதச் சுதந்திரம் என அனைத்து நிலைகளிலும் சிறுபான்மைச் சகோதரர்களுக்கான சமூகநீதியை நிலைநாட்டி இருக்கிறது.
இஸ்லாமிய மக்களுக்கு எதிரான சட்டங்களை பாஜக அரசு கொண்டு வரும்போதெல்லாம் மக்கள் மன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் அவற்றை எதிர்த்துக் கடுமையாகப் போராடி வருவதுடன், சட்டமன்றத் தீர்மானங்கள் வாயிலாகவும் நமது நிலைப்பாட்டை உறுதியாக வெளிப்படுத்தி வருகிறோம். மதச்சார்பின்மைக் கொள்கையில் சமரசமற்று நாம் செயல்படுவதால்தான், அனைத்துத் தரப்பு மக்களும் நம்மைத் தொடர்ந்து ஆதரித்து வருகிறார்கள்.
இந்தியாவில் பிற மாநிலங்களில் எல்லாம் வெறுப்பு விதைகள் தூவப்பட்டு, நாள்தோறும் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டு வரும் நிலையிலும் தமிழ்நாடு நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது. எல்லாருக்கும் எல்லாம் என்ற வழியில் நடைபோடும் நமது அரசு அனைவரது பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதிசெய்துள்ளது.
கடந்த 5 ஆண்டு திராவிட மாடல் ஆட்சியில், பல சிறப்பு அறிவிப்புகளையும், சென்னையில் ஹஜ் இல்லம், தொன்மையான பள்ளிவாசல்கள் – தர்காக்கள் புனரமைப்பு, இசுலாமிய மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகைகள் உள்ளிட்ட திட்டங்களையும் நிறைவேற்றி வந்திருக்கிறோம். இப்படி என்றும் உங்களில் இருந்து பிரிக்க முடியாத சொந்தமாக உறவாடும் அன்போடு, ஈகைப் பண்போடு ரமலான் பண்டிகையைக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதேபோல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து செய்தியில், “திருக்குர்ஆன் புனித நூல் அருளப்பட்ட மேன்மைமிகு ரமலான் மாதத்தின் 30 நாட்கள் நோன்பிருந்து ரம்ஜான் பெருநாளைக் கொண்டாடி மகிழும் அன்புக்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
மனிதகுலத்திற்கு வழிகாட்டியாக விளங்கும் இறைத் தூதர் நபிகள் நாயகம் அவர்கள் அருளிய போதனைகளை மனதில் நிறுத்தி, உடலையும், உள்ளத்தையும் ஒருநிலைப்படுத்தி, தூய்மை உணர்வோடு புனித ரமலான் மாதத்தில் நோன்பிருந்து, ஈகையின் சிறப்பினை எல்லோருக்கும் உணர்த்தும் வகையில், ஈட்டிய செல்வத்தில் ஒரு பங்கை ஏழை, எளியோருக்கு அளித்து, அனைவரும் இன்புற்று வாழ்ந்திட வேண்டி இறைவனைத் தொழுது, ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு இறைவன் அனைத்து நலன்களையும் வழங்கிட பிரார்த்திக்கிறேன்.
இறைத் தூதர் நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளான ஈகை, கருணை, அன்பு, மனித நேயம், சினம் தவிர்ப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து கடைபிடித்து, உலகில் அமைதியும், சமாதானமும் தழைத்திட உறுதியேற்போம் என்று கூறி, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது வழியில், உளங்கனிந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பெருநாளை மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் கொண்டாடி மகிழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த இனிய ரமலான் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பசித்தவர்களுக்கு உணவளியுங்கள், நோய்வாய்ப்பட்டவர்களுக்கு உதவுங்கள், துன்புற்றவர்களுக்கு உறுதுணையாக இருங்கள், அயலார்களிடம் அன்பு செலுத்துங்கள் போன்ற இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் போதனைகளை மனதில் நிறுத்தி, உடலையும் உள்ளத்தையும் ஒருநிலைப்படுத்தி தூய்மை உணர்வோடு ரமலான் நோன்பு இருந்த இஸ்லாமியச் சகோதர, சகோதரிகள் அனைவரின் எண்ணங்களும் விருப்பங்களும் ஈடேரற்றும் என இந்நாளில் பிரார்த்திப்போம்.
ரமலான் மாதத்தில் புனித நோன்பினை மேற்கொண்டு இறை உணர்வுடன் ஈகைத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரின் வாழ்விலும் அன்பு, அமைதி, இரக்கம், கருணை, ஒற்றுமை உணர்வு மற்றும் சகோதரத்துவம் தழைத்தோங்கிடவும், வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் தீர்ந்து உலக மக்கள் அனைவரின் வாழ்விலும் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்திட வேண்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை எனது புனித ரமலான் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளைப் பதிவு செய்துள்ளனர்.
