இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜெர்மனியை வீழ்த்தியதைக் கொண்டாடும் ரஷ்யாவின் பாரம்பரிய வெற்றி தின அணிவகுப்பு, இந்த ஆண்டு டாங்கிகள், ஏவுகணைகள் மற்றும் பிற ராணுவ உபகரணங்கள் இன்றி நடைபெறும் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
சுமார் 20 ஆண்டுகளில் முதல்முறையாகவும், உக்ரைன் போர் தொடங்கி நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும், மே 9 அன்று மாஸ்கோவின் சிவப்பு சதுக்கத்தில் (Red Square) ராணுவ தளவாடங்கள் அணிவகுத்துச் செல்லாது என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவின் மிக முக்கியமான தேசபக்தி கொண்டாட்டமாக கருதப்படும் இந்நாளை, கிரெம்ளின் தனது ராணுவ பலத்தை உலகிற்கு பறைசாற்றவே வழக்கமாகப் பயன்படுத்தும்.
2008 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செஞ்சதுக்கத்தில் நடைபெறும் வெற்றி நாள் அணிவகுப்புகளில் இராணுவ உபகரணங்களும் பல்வேறு ஆயுதங்களும் இடம்பெற்று வருகின்றன. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் போன்ற நகரங்கள் உட்பட, நாடு முழுவதும் மற்ற இடங்களில் சிறிய அளவிலான அணிவகுப்புகள் நடத்தப்படுகின்றன.
மாற்றத்திற்கான காரணங்கள் என்ன? பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய “செயல்பாட்டுச் சூழலை” (Operational situation) கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன், ரஷ்யாவின் உட்பகுதிகளில் ஆழமாக ஊடுருவி ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது. மாஸ்கோவிற்கு வடக்கே உள்ள பால்டிக் துறைமுகம் முதல் உரல் மலைப்பகுதி வரை உக்ரைனின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால், ஆபத்தைக் குறைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதாக கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். போர்க்கள இழப்புகளை மறைக்கவும், முக்கியமான ராணுவ சொத்துக்களைப் பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்த அணிவகுப்பில், “பல்வேறு வகையான உயர் இராணுவக் கல்வி நிறுவனங்கள் மற்றும் ரஷ்ய ஆயுதப் படைகளின் குறிப்பிட்ட சேவைப் பிரிவுகளைச் சேர்ந்த படைவீரர்கள்” மற்றும் ஒரு பாரம்பரிய இராணுவ விமானங்களின் வானில் பறத்தல் ஆகியவை இடம்பெறும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இந்த வெற்றி தினத்தை தனது 25 ஆண்டுகால ஆட்சியில் ஒரு முக்கிய தூணாக மாற்றியுள்ளார். இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியன் இழந்த 2.7 கோடி மக்களின் தியாகம், ரஷ்ய மக்களின் உணர்வுகளோடு ஆழமாகப் பிணைக்கப்பட்டுள்ளது.
டாங்கிகள் மற்றும் ஏவுகணை அமைப்புகள் இல்லாதது ரஷ்யாவின் வலிமையைக் குறைத்துக் காட்டுவதுடன், அதன் பாதிப்புத்தன்மையை (Vulnerability) வெளிப்படுத்துகிறது,” என்று ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட் ஆய்வாளர் நாடியா செஸ்குரியா தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்த வாய்ப்பு? அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடனான தொலைபேசி உரையாடலில், வெற்றி தினத்தை முன்னிட்டு உக்ரைனுடன் தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவிக்கத் தயாராக இருப்பதாக புடின் தெரிவித்துள்ளார். “பாசிசத்திற்கு எதிரான பொதுவான வெற்றி” என்பதால் ட்ரம்ப் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கிரெம்ளின் வட்டாரங்கள் கூறுகின்றன.
கடந்த ஆண்டு 80-வது ஆண்டு விழாவின் போது, 11,500 வீரர்கள் மற்றும் 180-க்கும் மேற்பட்ட ராணுவ வாகனங்களுடன் பிரம்மாண்டமாக நடைபெற்ற அணிவகுப்பு, இந்த ஆண்டு மிகவும் எளிமையாக நடைபெறவுள்ளது.
