ஐக்கிய நாடுகள் சபையின் முழு உறுப்பு நாடாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற பாலஸ்தீனத்தின் கோரிக்கைக்கு இந்தியா தனது தொடர்ச்சியான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற பாலஸ்தீன நன்கொடையாளர் குழுவின் அமைச்சர்கள் அளவிலான கூட்டத்தில், இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை செயலாளர் ஸ்ரீபிரியா ரங்கநாதன் கலந்து கொண்டார்.
ஐரோப்பிய ஆணையம் மற்றும் பாலஸ்தீன ஆணையம் இணைந்து நடத்திய இந்தக் கூட்டத்தில், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், பாலஸ்தீனம், சர்வதேச நட்பு நாடுகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் உரையாற்றிய ஸ்ரீபிரியா ரங்கநாதன், “பாலஸ்தீன மக்களுடன் இந்தியா நீண்டகால நட்புறவை பேணி வருகிறது. இரு நாடுகள் தீர்வு (Two-State Solution) மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடாக பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் முயற்சிக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது” என்று தெரிவித்தார்.
மேலும், பாலஸ்தீன மக்களுக்காக மனிதாபிமான உதவிகள், திறன் மேம்பாட்டு திட்டங்கள், கல்வி, சுகாதாரம், தொழிற்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா தொடர்ந்து பங்களித்து வருவதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், பெண்கள் மேம்பாடு, நிறுவன கட்டமைப்பு மற்றும் சுகாதாரத் துறைகளிலும் இந்தியா பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்ட அவர், பாலஸ்தீன மக்களின் மனிதாபிமான தேவைகளை பூர்த்தி செய்வதில் இந்தியா உறுதியான கூட்டாளியாக தொடர்ந்து செயல்படும் என்றும் உறுதியளித்தார்.
