ஈரானின் ஆன்மீக மற்றும் அரசியல் தலைவராக 1989-ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்த ஆயத்துல்லா அலி கமேனி, கடந்த சனிக்கிழமை தெஹ்ரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவிருந்த நிலையில், தற்போது அந்த இறுதிச் சடங்கு நிகழ்ச்சி காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக ஈரான் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு தெஹ்ரானில் உள்ள இமாம் கொமெய்னி மசூதியில் தொடங்கவிருந்த இந்த நிகழ்வு, பாதுகாப்பு காரணங்களால் தள்ளிவைக்கப்படுவதாக ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. இதற்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளதால், ஈரானிய மக்கள் மற்றும் சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இறுதிச் சடங்கு ஒத்திவைக்கப்பட்டதற்குப் பின்னால் கடுமையான பாதுகாப்பு காரணங்கள் இருப்பதாக ராணுவ ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே ஐந்தாவது நாளாகப் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், இறுதிச் சடங்கு நடைபெறும் இடத்தில் மீண்டும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. குறிப்பாக, இஸ்ரேலிய போர் விமானங்கள் தெஹ்ரான் வான்பரப்பில் தொடர்ந்து வட்டமிட்டு வருவதால், லட்சக்கணக்கான மக்கள் கூடும் ஒரு நிகழ்வை நடத்துவது பேராபத்தை விளைவிக்கும் என ஈரான் பாதுகாப்பு அமைப்புகள் கருதுகின்றன.
