ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் அதிகாலை நடத்திய திடீர் தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது. ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார். இந்நிலையில் இன்று அதிகாலை ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் திடீரென்று வான்வழி தாக்குதலை மேற்கொண்டது. இதில் கட்டிடங்கள் பல சேதமடைந்தன. அந்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் உயர் ஆலோசகர் அலி ஷம்கானியும் இஸ்ரேலிய தாக்குதலில் காயமடைந்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் தங்களை தாக்கும் என்று உளவுத்துறை தகவல் கிடைத்தாகவும் அவ்வாறு இஸ்ரேல் தாக்கினால் அந்நாட்டின் ரகசிய அணுசக்தி தளங்களை குறிவைத்து அழிப்போம் என்றும் ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் (SNSC) கடந்த திங்கள்கிழமை தெரிவித்தது. இந்த சூழலில், தெஹ்ரான் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களுக்கு இஸ்ரேல் பெரும் விலை கொடுக்க நேரிடும் என்று ஈரானிய ஆயுதப்படை செய்தித் தொடர்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போர்பதற்றம் காரணமாக இரு நாட்டு வான்வெளிகளும் மூடப்பட்டுள்ளன. இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.