கோல்டு கார்டு விசா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், இந்தியா, சீனா போன்ற நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் அமெரிக்காவின் சிறந்த பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற பிறகு தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்ப செல்ல வேண்டியது “வெட்கக்கேடானது” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கான பாதையை வழங்கும் புதிய மில்லியன் டாலர் விசா திட்டமான ‘டிரம்ப் கோல்ட் கார்டு’ திட்டத்தை அதிபர் டிரம்ப் நேற்று தொடங்கி வைத்துள்ளார். இதையடுத்து வெள்ளை மாளிகையில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் பேசிய டிரம்ப், இந்த திட்டம், நிறுவனங்கள் நாட்டில் அத்தகைய திறமையாளர்களை பணியமர்த்தவும் தக்கவைக்கவும் உதவும் என்றார். இது புலம்பெயர்ந்தோருக்கு அமெரிக்க குடியுரிமைக்கான பாதையை வழங்கும் ஒரு விசா திட்டமாகும். “டிரம்ப் கோல்ட் கார்டு” என்பது அமெரிக்காவிற்கு கணிசமான நன்மைகளை வழங்குவதற்கான ஒரு நபரின் திறனை அடிப்படையாகக் கொண்ட விசா ஆகும்.
“இவ்வளவு சிறந்த ஒருவர் நம் நாட்டிற்கு வருவது ஒரு பரிசு, ஏனென்றால் இவர்கள் இங்கே தங்க அனுமதிக்கப்படாத சில அசாதாரண மனிதர்கள் என்று நாங்கள் நினைக்கிறோம். அவர்கள் கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு, அவர்கள் இந்தியாவுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும், அவர்கள் சீனாவுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும், அவர்கள் பிரான்சுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ அங்கேயே திரும்பிச் செல்ல வேண்டும். அங்கேயே தங்குவது மிகவும் கடினம். இது ஒரு அவமானம். இது ஒரு கேலிக்கூத்து. நாங்கள் அதைப் பரிசீலித்து வருகிறோம்,” என்று கூறினார்.
கோல்ட் கார்டு வலைத்தளம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அமெரிக்காவில் உள்ள வார்டன், ஹார்வர்ட் மற்றும் எம்ஐடி போன்ற சிறந்த அமெரிக்க பல்கலைக்கழகங்களின் மாணவர்களை வைத்திருக்க நிறுவனங்கள் கோல்ட் கார்டுகளை வாங்கலாம் என்றும் டிரம்ப் அறிவித்தார். இந்த நிகழ்வில் ஐபிஎம்மின் இந்திய-அமெரிக்க தலைமை நிர்வாக அதிகாரி அரவிந்த் கிருஷ்ணா மற்றும் டெல் டெக்னாலஜிஸின் தலைமை நிர்வாக அதிகாரி மைக்கேல் டெல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
