நியூயார்க் நகரின் டைம்ஸ் ஸ்கொயரில் இந்த வாரம் “Jesus is Palestinian” (இயேசு ஒரு பாலஸ்தீனியர்) என்ற வாசகத்துடன் ஒரு விளம்பர பலகை நிறுவப்பட்டது. இது கிறிஸ்துமஸ் காலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விளம்பரத்தை அமெரிக்க–அரபு எதிர்ப்பு வேற்றுமை ஒழிப்பு குழு (American-Arab Anti-Discrimination Committee – ADC) நிறுவியது. பலர் இதைத் தூண்டிவிடும் (inflammatory) செய்தியாகக் கூறி விமர்சித்துள்ளனர். குறிப்பாக பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணிகள் சிலர் கவலை தெரிவித்துள்ளனர்.
ஒரு சமூக ஊடக பயனர், “ஒரு அமெரிக்க நகரத்தில் இப்படியான விளம்பரத்தைப் பார்ப்பது கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது” என்று எழுதியுள்ளார். மற்றொருவர், “இவ்வளவு பரபரப்பான இடத்தில் இப்படியொரு அழகான செய்தியைப் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது” என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில், ADC அமைப்பின் தேசிய நிர்வாக இயக்குநர் அடெப் ஆயூப், தனது அமைப்பு இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து டைம்ஸ் ஸ்கொயரில் விளம்பர இடத்தை வாடகைக்கு எடுத்து வருவதாகவும், அந்த விளம்பரங்களை வாரந்தோறும் புதுப்பித்து வருவதாகவும் விளக்கினார்.
நகரில் அதிகமான மக்கள் நடமாட்டம் இருக்கும் காலங்களில், குறிப்பாக கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும் அரபு அமெரிக்கர்கள் இடையே உரையாடலைத் தொடங்குவதே இந்த முயற்சியின் நோக்கம் என்று அவர் கூறினார்.இந்த பிரச்சாரத்தின் பின்னணியில் உள்ள தாரக மந்திரம் “அமெரிக்காவே முதலில்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
நியூயார்க் போஸ்ட் (New York Post) இதழுக்கு அளித்த பேட்டியில், அடெப் ஆயூப் கூறியதாவது,“இந்த நாட்டில் உள்ள பெரும்பாலான அமெரிக்கர்கள் கிறிஸ்தவர்கள், மேலும் பாலஸ்தீனம் கிறிஸ்தவத்தின் பிறப்பிடமாகும். இதைப் பற்றி மக்கள் விவாதிக்க விரும்பினால், அது நல்ல விஷயமே. இந்த விளம்பர பலகை ஒரு விவாதத்தைத் தொடங்கியுள்ளது. குறைந்தபட்சம் இது பேசப்படுகிறதே. இல்லையெனில், எங்கள் குரல்கள் அடக்கப்பட்டிருக்கும்; எங்கள் கருத்துகளும் எண்ணங்களும் கேட்கப்படாமல் போயிருக்கும் என்றார்.”
இயேசு பழமையான யூதேயா (Judea) பகுதியிலுள்ள பெத்லகேம் (Bethlehem) நகரில் பிறந்தார். அந்த இடம் தற்போது ஜெருசலேமின் தெற்கே அமைந்துள்ள மேற்கு கரை (West Bank) பகுதியில், பாலஸ்தீனப் பிரதேசங்களுக்குள் உள்ளது. அவர் நாசரேத்து (Nazareth) நகரில் வாழ்ந்தார். அந்த காலத்தில் அந்த நகரம் யூதேயா மற்றும் கலிலேயா (Galilee) பகுதிகளுடன் தொடர்புடையதாக இருந்தது.
