லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் உருவப்படத்தை திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் பெரியார் குறித்து தமிழில் நீண்ட உரையாற்றினார். அதில், பல நூறு ஆண்டுகளாக, உலகின் சிறந்த அறிவாளிகளை உருவாக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அரங்கத்தில் தமிழ்நாட்டு முதலமைச்சர், தெற்காசிய அரசியலை புரட்டிப் போட்ட இயக்கமான திமுக தலைவர் என்ற தகுதியோட மட்டுமில்லாமல் பெரியாரின் பேரன் என்ற கம்பீரத்தோட நிற்கிறேன்.
பகுத்தறிவுப் பகலவன் – அறிவாசான் தந்தை பெரியாரின் உருவப்படத்தை இங்கு திறந்து வைத்ததை நினைத்து பெருமைப்படுகிறேன். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அறிவோட அடையாளம் மட்டுமில்லாமல் மனித உரிமையின் அடையாளம், உலக அடையாளம். அப்படிப்பட்ட இந்த இடத்தில் பெரியார் படம் திறக்கப்பட்டிருப்பது உலகப் பெருமை.
தந்தை பெரியாரின் கொள்கை வாரிசு என்று சொல்லிட்டு இருக்கும் நான் பலமுறை பெரியாரைப் பார்த்திருக்கிறேன். எங்கள் வீட்டில் நடைபெற்ற திருமணத்தை நடத்தி வைக்க தந்தை பெரியார் வந்தபோது, இந்தக் கையால அவருக்கு உணவு பரிமாறி இருக்கிறேன். இதை சொல்லும்போதே எனக்குள் பெருமை பொங்கி எழுகிறது.
ஒரு இனத்துக்கே சுயமரியாதை உணர்வை ஊட்டி தலைநிமிர வைத்த தந்தை பெரியாரை உலகம் கொண்டாடி வருவதுதான் தமிழ்நாட்டுக்கும், திராவிட இயக்கத்துக்கும் கிடைத்த மிகப்பெரிய பெருமை” என்றார்.
மேலும், தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “சுயமரியாதை இயக்கத்தை பெரியார் சாதாரணமா தோற்றுவிக்கவில்லை. உலகம் முழுக்க பயணம் செய்து அதை அனுபவப்பூர்வமாக உணர்ந்து, தமிழ்நாட்டுக்கு எடுத்துச் சொன்னவர் பெரியார். பகுத்தறிவை போதித்த பெரியார் வெறும் நம்பிக்கையை கண்டுப்பிடிப்பாக ஏத்துக்கக் கூடாது என்று சொல்லி, எல்லாத்தையும் கேள்வி கேட்கச் சொன்னார்.
தெருக்களுக்கு வைக்கப்பட்ட சாதிப் பெயர்களை நீக்கியவர் பெரியார். பெண்கள் மறுமணம் செய்து கொள்ளலாம் என்பதை பகிரங்கமாக கூறியவர். நகராட்சிப் பள்ளிகள்ல தீண்டப்படாத வகுப்புக் குழந்தைகள் சேரவும், படிக்கவும் வழி கண்டார்.
சமூகநீதி, பெண்களுக்கு சொத்துரிமை, தீண்டாமை ஒழிப்பு, பொது இடங்களில் பட்டியலினத்தவர்க்கு தடை இருக்கக் கூடாது, நில உரிமை, கைம்பெண் மறுமணம், தமிழுக்கு முக்கியத்துவம், சமஸ்கிருத ஆதிக்க எதிர்ப்பு – இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு ஆகியவைதான் சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகள். இதற்காக தள்ளாத வயதிலும் அலைந்து போராடியவர்” என பெரியாரை புகழ்ந்து மு.க.ஸ்டாலின் பேசினார்.