Sengottaiyan: இன்று மனம் திறந்து பேசப்போவதாக அதிமுக முன்னால் அமைச்சர் செங்கோட்டையன் பேசி இருப்பதால், அவர் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த சூழலில் கடந்த 1ம் தேதி கோபிச்செட்டிபாளையத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய செங்கோட்டையன் இன்று மனம் திறந்து பேச உள்ளதாக அறிவித்தார்.
இதனால் எடப்பாடியுடன் கருத்து மோதலில் இருந்த செங்கோட்டையன் அவருக்கு எதிராக ஏதாவது போர்க்கொடி தூக்குவாரா என்ற கேள்வி எழுந்தது. இதற்கிடையே, செங்கோட்டையுடன் பேச்சுவார்த்தை நடத்த குள்ளம்பாளையத்தில் உள்ள அவரது வீட்டிற்கு முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாவட்ட செயலாளருமான கே.வி.ராமலிங்கம் சென்றிருந்தார். அப்போது அரைமணி நேரம் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் இன்று காலை 9.15 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கும் செங்கோட்டையன், கட்சி தலைமையில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தியை வெளிப்படுத்துவாரா? கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைப்பது குறித்து மனம் திறந்து பேச போகிறாரா? பாஜக கூட்டணியில் அதிமுக இணைந்தது குறித்து பேசுவாரா? அதிமுகவில் இருந்து விலக போவதாக அறிவிப்பாரா? புதிய கட்சியில் கூட்டணி அமைப்பது குறித்து பேசுவாரா? என்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
ஏற்கெனவே எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன் இன்று மனம் திறந்து பேச உள்ளதால் அவரது வீட்டிற்கு ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் படையெடுப்பார்கள் என கூறப்படுகிறது.