ரஷ்யாவின் கருங்கடல் சுற்றுலா நகரமான கெலென்ட்ஜிக்கிற்கு (Gelendzhik) அருகிலுள்ள அர்கிபோ-ஒசிபோவ்கா (Arkhipo-Osipovka) கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த ட்ரோன் தாக்குதலில், மூன்று குழந்தைகள் உட்பட குறைந்தது ஏழு பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். மேலும் இச்சம்பவத்தில் 40 பேர் காயமடைந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் 21 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற 19 பேர் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்றுச் சென்றதாகவும் கிராஸ்னோடார் கிராய் பிராந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. கோடை விடுமுறையைக் கழிக்க ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் குவியும் இந்தக் கடற்கரை, தாக்குதல் நடந்தபோது மிகவும் கூட்டமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
https://x.com/visegrad24/status/2084301901915406517?
ட்ரோன் கடற்கரையில் மோதி வெடிக்கும் தருணம் ஊடகங்களால் சரிபார்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. வெடிப்புக்கு முன்பு இயந்திரத் துப்பாக்கிச் சுடும் சத்தம் போன்ற சத்தங்களைக் கேட்டதாக நேரில் பார்த்தவர்கள் ஊடகங்களிடம் தெரிவித்தனர். திடீரென நிகழ்ந்த இந்தத் தாக்குதலில் அங்கிருந்தவர்கள் தப்பியோடக்கூட நேரம் கிடைக்கவில்லை என்று சுற்றுலாப் பயணி ஒருவர் வேதனை தெரிவித்தார். பலத்த வெடிப்புகள் தங்களது குழந்தைகளின் கண்முன்னே நிகழ்ந்ததாகவும் சிலர் விவரித்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு உக்ரைன்தான் காரணம் என்று ரஷ்யாவின் கிராஸ்னோடார் கிராய் ஆளுநர் வெனியாமின் கொன்ட்ராட்யேவ் குற்றம் சாட்டியுள்ளார். இருப்பினும், உக்ரைனிய அதிகாரிகள் தரப்பிலிருந்து இது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ கருத்தோ அல்லது பொறுப்பேற்போ இதுவரை வெளியிடப்படவில்லை.
