பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை வேறு சிறைக்கு மாற்றம் செய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான், கடந்த 2018 முதல் 2022ம் ஆண்டு வரை பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்த போது, அவர் மீது ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அப்போது நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மை இல்லாததால், 2022 ஏப்ரலில் இம்ரான் கான் பிரதமர் பதவியை இழந்தார். பின்னர் பொறுப்பேற்ற பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு, இம்ரான் கான் மீது, பல்வேறு வழக்குகளை பதிவு செய்தது.

ஊழல் புகாரில் தண்டிக்கப்பட்ட இம்ரான் கான், கடந்த 2023  ஆகஸ்ட் முதல் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இம்ரான் கானை சந்திக்க அவரது குடும்பத்தினர் நீதிமன்ற ஆணை பெற்றிருந்தும், அவர்களுக்கும், இம்ரான் ஆதரவாளர்களுக்கும் போலீசார் அனுமதி மறுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், சிறையில் இம்ரான் கான் சித்ரவதை செய்யப்பட்டு, கொல்லப்பட்டுவிட்டதாக தகவல்கள் பரவியது. இந்த செய்தியை அடியாலா சிறை நிர்வாகம் மறுத்தது. இதனையடுத்து, இம்ரான் கான் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். சிறை வளாகங்கள் மற்றும் பல்வேறு இடங்களில் போராடிய அவர்கள் இம்ரான் குறித்த உண்மை செய்தியை பாகிஸ்தான் அரசு வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதனையடுத்து, சிறையில் உள்ள இம்ரான் கானை, அவரது சகோதரி உஸ்மா கான் சந்திக்க அனுமதிக்கப்பட்டார். இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த உஸ்மா, தனிமைப்படுத்தப்பட்ட சிறையில் இம்ரான் அடைக்கப்பட்டுள்ளதாகவும், மனதளவில் அவர் சித்ரவதைக்குள்ளாக்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.  இந்தநிலையில், இம்ரான் கானை மீண்டும் சந்திக்க அனுமதி மறுத்த சிறை நிர்வாகத்தைக் கண்டித்து, சிறை வளாகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. இதனால், சிறை வளாகப் பகுதியில் பரபரப்பான நிலவியது.

இந்தநிலையில், தொடர் போராட்டம் காரணமாக, அடியாலா சிறையில் இருந்து, இம்ரான் கானை வேறு சிறைக்கு மாற்றம் செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அட்டோக் மாவட்ட சிறைக்கு அவரை மாற்றவே, அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் தெரிகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version