மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டுவர தெஹ்ரானும் வாஷிங்டனும் ஒரு பொதுவான நிலைப்பாட்டைக் கண்டறியப் போராடி வரும் நிலையில், ஒரு ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர், மத்தியஸ்தராக பாகிஸ்தானின் பங்கு குறித்து சந்தேகம் எழுப்பியதோடு, பேச்சுவார்த்தை செயல்பாட்டில் அதன் நடுநிலைமை குறித்தும் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
ஈரானின் தஷ்தெஸ்தான் தொகுதியின் பிரதிநிதியும், ஈரானின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளராகவும் பணியாற்றும் இப்ராஹிம் ரெஸாயி, பாகிஸ்தான் ஒரு நல்ல அண்டை நாடு மற்றும் நண்பன் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, ஆனால் இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ய அது தகுதியான நாடு அல்ல என்று தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மீது தங்களுக்கு முழுமையான நம்பிக்கை இல்லை என்பதை அவரது கருத்துக்கள் வெளிப்படுத்தியுள்ளன. அமெரிக்காவின் நலன்களுக்குச் சாதகமாகச் செயல்படுகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
இது குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள ரெசாய், “பாகிஸ்தான் ஒருபோதும் அமெரிக்காவின் விருப்பத்திற்கு மாறாக ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. உதாரணமாக, ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்கள் அல்லது லெபனான் விவகாரத்தில் அமெரிக்கா தனது வாக்குறுதிகளை மீறியபோது, பாகிஸ்தான் அதைச் சுட்டிக்காட்டத் தவறிவிட்டது” என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரானியத் தலைமைக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் முயற்சிக்கும் சூழலில், இந்த விமர்சனம் முக்கியத்துவம் பெறுகிறது.
ஒரு மத்தியஸ்தர் என்பவர் எப்போதும் நடுநிலையானவராக இருக்க வேண்டும் என்றும், ஒரு தரப்பிற்கு ஆதரவாகச் செயல்படுபவர் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க முடியாது என்றும் ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது. பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனிர் மற்றும் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஆகியோர் இந்த விவகாரத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தாலும், ஈரான் தரப்பில் இருந்து எழுந்துள்ள இந்த அதிருப்தி மத்தியஸ்த முயற்சிகளில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் பிடியில் இருக்கும் பாகிஸ்தானால் ஈரானுக்கு நியாயமான தீர்வைப் பெற்றுத்தர முடியாது என்பதே ஈரானின் தற்போதைய நிலைப்பாடாக உள்ளது.
