தாலிபான்கள் நடத்தும் ஆப்கானிஸ்தானில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேரை கொலை செய்த நபரை, 80 ஆயிரம் பேர் முன்னிலையில் 13 வயது சிறுவனை வைத்து சுட்டுக்கொன்று தண்டனையை நிறைவேற்றிய அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணமான கோஸ்ட் மாகாணத்தில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 குழந்தைகள், ஒரு பெண் உள்பட 13 பேரை நபர் ஒருவர் கொலை செய்துள்ளார். இதுதொடர்பான வழக்கில் அந்த நபருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை தொடர்ந்து நேற்று செவ்வாய் கிழமை, பொது இடத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக கூறப்படும் ஒரு சிலிர்க்க வைக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
மைதானம் ஒன்றில் திரண்டிருந்த பாதிக்கப்பட்டவரின் உறவினர் உள்பட 80,000 பேர் சாட்சியாக, 13 வயது சிறுவனால் இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அப்போது குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட நபர் மைதானத்தின் மையத்தில் அமர வைக்கப்பட்டு அவர் மீது ஐந்து முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அவர் மண்ணில் சரிந்து விழுந்ததும், குழுமியிருந்த மக்கள் மத கோஷங்களை எழுப்பினர். பொது மரணதண்டனை சர்வதேச கண்டனத்தைப் பெற்றது, ஐக்கிய நாடுகள் சபையின் ஆப்கானிஸ்தான் சிறப்பு அறிக்கையாளர் ரிச்சர்ட் பென்னட், இதை “மனிதாபிமானமற்றது, கொடூரமானது மற்றும் சர்வதேச சட்டத்திற்கு முரணானது” என்று தெரிவித்துள்ளார்.
