உக்ரைனில் நடந்துகொண்டிருக்கும் போர் மற்றும் கடுமையான குளிர்காலத்திற்கு மத்தியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மனிதாபிமான அடிப்படையில் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். கடுமையான குளிர்காலத்தில் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட மற்ற நகரங்கள் மீது தாக்குதல் நடத்துவதை குறைந்தது ஒரு வாரமாவது நிறுத்தி வைக்குமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் தான் வலியுறுத்தியுள்ளதாக டிரம்ப் கூறினார்.
வியாழக்கிழமை வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது, கடுமையான குளிர்காலத்தில் கீவ் மற்றும் பிற நகரங்கள், ஊர்கள் மீதான தாக்குதல்களை ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைக்குமாறு அதிபர் புடினிடம் தனிப்பட்ட முறையில் தான் கேட்டுக்கொண்டதாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார். ரஷ்யா உக்ரைனின் மின் நிலையங்கள் மற்றும் பிற முக்கிய உள்கட்டமைப்புகள் மீது மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தி, நாடு முழுவதும் பரவலான மின்வெட்டை ஏற்படுத்தி வரும் நேரத்தில் டிரம்பின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. ரஷ்யாவிடமிருந்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வராதபோதிலும், தனது கோரிக்கைக்கு அதிபர் புடின் ஒப்புக்கொண்டதாக டிரம்ப் கூறினார்.
முன்னதாக, கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் முறையாக அமெரிக்கா – ரஷியா – உக்ரைன் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை அபுதாபியில் நடைபெற்றது. இதையடுத்து பிப்ரவரி 1-ஆம் தேதி இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
