சவுதி அரேபியாவில் இன்று அதிகாலை எதிர்பாரா விதமாக நிகழ்ந்த விபத்தில் 42 இந்தியர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி அரேபியாவின் மிக முக்கிய பகுதியும் இஸ்லாமிய புனித தலமாகவும் கருதப்படும் இடங்கள் மெக்கா மற்றும் மதீனா. இதில் மதீனாவுக்கு அருகே உம்ரா புனித பயணம் சென்றவர்களின் பேருந்து இன்று அதிகாலை டீசல் ஏற்றி வந்த டேங்கர் லாரி மோதி பயங்கர விபத்திற்குள்ளானது. இந்த விபத்து மதீனாவிலிருந்து சுமார் 160 கி.மீ தொலைவில் உள்ள முஹர்ராஸ் அருகே, இந்திய நேரப்படி அதிகாலை 1.30 மணி நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. அப்பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் பலர் இக்கோர சம்பவத்தில் பலியாகியுள்ளனர். அதில் பயணம் செய்த 42 இந்தியர்களும் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உயிரிழந்தவர்களில் 20 பேர் பெண்கள் என்றும், 11 பேர் குழந்தைகள் என்பதும் தெரிய வந்துள்ளது. பேருந்தில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் தெலங்கானா மற்றும் ஹைதராபாத்தை சேர்ந்தவர்கள் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து பற்றிய தகவல் கிடைக்கப்பெற்றதில் இருந்து ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக தெலங்கானா அரசு தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும் தேவையான உதவிகளைச் செய்வதற்கும் தூதரகத்துடன் நெருக்கமாக பணியாற்றுமாறு தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி டெல்லியில் உள்ள மத்திய அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விபத்து குறித்து தகவல் அறிய 24 மணி நேரம் இயங்கும் உதவி எண்ணை இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது. அதன்படி ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரகம் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள 8002440003 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தகவல் தேடும் குடும்பங்களுக்காக தெலங்கானா அரசு செயலகத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. இதற்காக 79979 59754, 99129 19545 என்ற தொடர்பு எண்களையும் அறிவித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version