பெருமழை அச்சத்தில் இருந்து சென்னை மக்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

கட்டமைப்பு வசதிகள் மிகுந்த, மாநிலத் தலைநகரில் கடந்த சில ஆண்டுகளாகவே நவம்பர், டிசம்பர் மாதம் வந்தாலே சென்னை மக்கள் ஒவ்வொரு நாளையும் அச்சத்துடன் கடக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை மாநகருக்குள் வரும் வெள்ள நீராக இருந்தாலும், மழைநீராக இருந்தாலும் அந்தந்த பகுதிகளில் சேமிப்பதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தும் தொலைநோக்கு திட்டங்களை ஏற்படுத்தி இருக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டி உள்ளார். உபரிநீர், கழிவுநீர் தேங்காமல் வெளியேற வடிகால் வசதிகளையும் ஏற்படுத்தியிருக்க வேண்டும் என ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.  இதனை செய்யாததால் ஒவ்வொரு ஆண்டும் சில மாதங்கள் தண்ணீர் பஞ்சமும், சில வாரங்கள் தண்ணீரில் தத்தளிக்கும் நிலையும் தொடர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டுகளில் ஓரிரு நாள் மழையை கூட தாக்குப் பிடிக்க முடியாத அளவுக்கு மாநகரம் மாநரகமாகிப் போனதாகவும் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார். சாலைகள், தெருக்கள், சுரங்கப் பாதைகள் மட்டுமல்லாது வீடுகளிலும் வெள்ள நீர் புகுந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

டிசம்பர் 11, 12 நாட்களில் அதிக கனமழை இருக்கலாம் என்று கூறப்படுவதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் அதிக பாதிப்புகள் இருக்கக்கூடும் என சுட்டிக்காட்டி உள்ள மருத்துவர் ராமதாஸ், ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் உபரிநீர் மற்றும் மழைநீர் தடையின்றி வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.

பேரிடர் மேலாண்மைத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, வருவாய்த் துறை மற்றும் பெருமாநகராட்சி அமைப்புகள் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

பேரிடர் காலங்களில் அரசோடு மக்களும் இணைந்து செயல்படும் கலாச்சாரத்தை உருவாக்க விழிப்புணர்வு முகாம்கள் நடத்த வேண்டும் என்றும் மருத்துவர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version