வங்கதேச பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவியேற்கவுள்ள நிலையில், இவ்விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வங்கதேசத்தில் கடந்த 2024 ஆகஸ்டில் மாணவர் போராட்டத்தால் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்தது. தொடர்ந்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. இந்நிலையில் ஆட்சி கவிழ்ந்தபின் 18 மாதங்கள் கழித்து முதல்முறையாக புதிய அரசை தேர்ந்தெடுக்க நேற்று அந்நாட்டில் பொதுத்தேர்தல் நடந்தது. இது வங்கதேசத்தின் 13வது பொதுத்தேர்தல் தேர்தல் ஆகும்.

இதில் 17 ஆண்டுகால வெளிநாட்டு வாழ்க்கைக்குப் பிறகு சமீபத்தில் நாடு திரும்பிய மறைந்த வங்கதேச பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி கூட்டணி மற்றும் அதன் முன்னாள் கூட்டாளியான ஜமாத்-இ-இஸ்லாமி ஆகிய கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி நடந்தது. இந்நிலையில் 300 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில், 200-க்கும் மேற்பட்ட இடங்களை தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி கூட்டணி கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.

இதைத்தொடர்ந்து தாரிக் ரஹ்மான் வங்கதேச பிரதமர் ஆக வரும் 17ம் தேதி பதவியேற்க உள்ளார். இந்த நிலையில், டாக்காவில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடிக்கு அழைப்பு வந்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியா உள்பட சீனா, சவுதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி, இலங்கை, நேபாளம் உள்ளிட்ட 13 அண்டை நாடுகளுக்கு இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் அழைப்பு விடுத்துள்ளர். கடைசியாக கடந்த 2021ம் ஆண்டு பிரதமர் மோடி வங்கதேசம் சென்றது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version