மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள போர் தற்போது இந்தியப் பெருங்கடல் பகுதிக்கும் பரவியுள்ளது. இலங்கை கடற்கரைக்கு அருகே சென்று கொண்டிருந்த ஈரானிய கப்பல் ஒன்றின் மீது, அடையாளம் தெரியாத நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அந்தக் கப்பல் பலத்த சேதமடைந்தது. இந்தத் தாக்குதலில் கப்பலில் இருந்த 101 பேர் மாயமாகியுள்ளனர் என்றும், 78 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் இலங்கை கடற்படை மற்றும் பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியுள்ளன.

தாக்குதலுக்குள்ளான கப்பலில் இருந்து தப்பித்தவர்களை மீட்க இலங்கை கடற்படை தீவிரமான தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. காயமடைந்த 78 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாயமான 101 பேரின் நிலை என்னவென்று தெரியாததால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்தத் தாக்குதல் இலங்கை எல்லைக்கு மிக அருகாமையில் நடந்துள்ளதால், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. சர்வதேச கடல் வழித்தடத்தில் நிகழ்த்தப்பட்ட இந்தத் தாக்குதலால் மற்ற வர்த்தகக் கப்பல்களும் பாதுகாப்பான இடங்களுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளன.

இந்தத் தாக்குதலை நடத்தியது எந்த நாட்டு நீர்மூழ்கிக் கப்பல் என்பது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், அமெரிக்கா அல்லது இஸ்ரேல் நாட்டின் நீர்மூழ்கிக் கப்பல்கள் ஈரானின் விநியோகச் சங்கிலியைத் துண்டிக்கும் நோக்கில் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று ராணுவ வல்லுநர்கள் சந்தேகிக்கின்றனர். ஈரானுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான போர் தற்போது தெற்காசியப் பகுதிக்கு மிக அருகில் வந்துள்ளதால், இந்தியாவின் பாதுகாப்பிற்கும் இது பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version