பயங்கரவாதி மசூத் அசார் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உலா வருவதாக உளவுத்துறை கண்டறிந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐ.நா., சபையால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர் மசூத் அசார். ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத இயக்கத்தின் தலைவரான இவர், 2016-ம் ஆண்டு தான்கோட் விமானப்படை தளம் தாக்குதல், 2019ம் ஆண்டு புல்வாமா தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவர். பஹல்காம் சம்பவத்தை அடுத்து, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் இயங்கி வந்த பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.

இந்த தாக்குதலின் போது மசூத் அசாரின் குடும்பமும் கொல்லப்பட்டனர். ஆனால் மசூத் மட்டும் தப்பிவிட்டதாகவும், அவர் எங்கிருக்கிறார் என்ற தகவல் குறித்து தெரியவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மிரில் அவரது நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறை கண்டறிந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பஹாவல்பூரில் இருந்து 1000 கி.மீ., தொலைவில் உள்ள கில்ஜித்-பல்திஸ்தான் பகுதியில் மசூத் தென்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது. அதேபோல, ஸ்கர்டு பகுதியிலும் அவனது நடமாட்டம் இருப்பதை உளவுத்துறை கண்டறிந்துள்ளது. இந்த ஸ்கர்டு பகுதி என்பது, கில்ஜித்-பல்திஸ்தான் பகுதிக்கு உட்பட்ட ஒரு நகரமாகும். இங்கு 2 மசூதிகள், அரசு மற்றும் தனியார் ஓய்வு விடுதிகள் அதிகம் உள்ளன.

ஆப்கானிஸ்தானில் தான் மசூத் அசார் ஒளிந்து கொண்டிருப்பார் எனவும், பாகிஸ்தான் மண்ணில் அவர் இருந்தால் உடனடியாக பிடித்து இந்தியாவிடம் ஒப்படைப்போம் எனவும் பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் புட்டோ ஜர்தாரி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version