உலக அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய 100 முக்கிய நபர்களின் பட்டியலை ‘டைம்’ (TIME) இதழ் வெளியிட்டுள்ளது. அதாவது, 2026-ஆம் ஆண்டின் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் முதன்மை இடங்களைப் பிடித்துள்ளனர்.
ஆனால், கடந்த பல ஆண்டுகளாக இந்தப் பட்டியலில் இடம்பிடித்து வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் இந்த முறை இடம்பெறாதது சர்வதேச அரசியல் அரங்கில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கும் வகையில் கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, பாலிவுட் நட்சத்திரம் ரன்பீர் கபூர் மற்றும் புகழ்பெற்ற சமையல் கலைஞர் விகாஸ் கண்ணா ஆகிய மூவர் இந்தப் பட்டியலில் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.
உலகத் தலைவர்கள் வரிசையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, கனடா பிரதமர் மார்க் கார்னி ஆகியோருடன் அண்டை நாடுகளான நேபாளத்தின் பிரதமர் பாலன் ஷா மற்றும் வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மான் ஆகியோரும் இடம்பிடித்துக் கவனம் ஈர்த்துள்ளனர். தொழில்நுட்பப் பிரிவில் சுந்தர் பிச்சையுடன் யூடியூப் சிஇஓ நீல் மோகன் மற்றும் ஓபன் ஏஐ (OpenAI) அதிகாரி சாரா பிரையர் ஆகியோர் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
கலைத்துறையில் ரன்பீர் கபூரின் பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளது இந்தியத் திரை உலகிற்குப் பெருமையாகக் கருதப்படுகிறது. சமூக மாற்றம், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அரசியல் செல்வாக்கு ஆகியவற்றின் அடிப்படையில் உலகை வடிவமைக்கும் ஆற்றல் கொண்டவர்களை ஒருங்கிணைத்து இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
