தமிழகத்தின் கிழக்குக் கடற்கரை பகுதிகளில் நேற்று (ஏப்ரல் 15-ம் தேதி) முதல் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படும் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக, சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் விசைப்படகுகள் அனைத்தும் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. மீன் வரத்து பெருமளவு குறைந்ததால், சந்தையில் மீன்களின் விலை வழக்கத்தை விட மூன்று மடங்கு வரை உயர்ந்துள்ளது. குறிப்பாக, அசைவப் பிரியர்களால் அதிகம் விரும்பப்படும் வஞ்சிரம் மீன் கிலோ ரூ.1,200 முதல் ரூ.1,600 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வவ்வால் ரூ,1,000-க்கும், இறால், சங்கரா மற்றும் நெத்திலி போன்ற வகைகள் தலா ரூ.500 முதல் ரூ.600 வரையிலும் விற்பனையாவதால் பொதுமக்கள் பெரும் கவலையடைந்துள்ளனர்.

மீன்களின் இனப்பெருக்க காலத்தைக் கருத்தில் கொண்டு ஜூன் 14-ம் தேதி நள்ளிரவு வரை ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டுப் படகுகள் மூலம் பிடித்து வரப்படும் குறைந்த அளவிலான மீன்களே சந்தைக்கு வருவதால், நிலவும் அதீத தேவைக்கு ஏற்ப விநியோகம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. வரும் வாரங்களில் மீன் வரத்து இன்னும் குறையும் என்பதால், விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் அசைவப் பிரியர்கள் சிக்கன் மற்றும் முட்டை போன்ற மாற்று உணவுகளை நாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version