அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சங்க இரவு விருந்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் நேற்று இரவு (ஏப்ரல் 25) நடைபெற்ற இந்த விருந்தின் போது, பாதுகாப்பு சோதனைகள் நடைபெறும் பகுதிக்கு அருகே துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டது.
இதனால் மேடையில் அமர்ந்திருந்த டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப் ஆகியோரை ரகசிய சேவை அதிகாரிகள் உடனடியாகப் பாதுகாப்பாக வெளியேற்றினர். அரங்கிற்குள் இருந்த நூற்றுக்கணக்கான செய்தியாளர்கள் மற்றும் விருந்தினர்கள் அச்சத்தில் மேசைகளுக்கு அடியில் பதுங்கினர்.
https://x.com/sentdefender/status/2048202539770802483/video/1
இந்தச் சம்பவம் தொடர்பாக கலிபோர்னியாவைச் சேர்ந்த கோல் தாமஸ் ஆலன் (31) என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து துப்பாக்கிகள் மற்றும் கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் ரகசிய சேவை அதிகாரி ஒருவர் காயமடைந்த போதிலும், குண்டு துளைக்காத கவசம் அணிந்திருந்ததால் அவர் உயிர் தப்பினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், பாதுகாப்புப் படையினரின் துரித நடவடிக்கையைப் பாராட்டினார். மேலும், 2024-ல் பென்சில்வேனியா மற்றும் புளோரிடாவில் நடந்த கொலை முயற்சிச் சம்பவங்களைக் குறிப்பிட்ட அவர், “தன் மீதான தாக்குதல்கள் புதியதல்ல” என்றும், ஜனநாயகத்தின் மீதான இத்தகைய வன்முறைகள் கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தார்.

